தமிழகத்தில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.
அதன்பின் தேர்தல் வரை, 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை, தேர்தலுக்கு பின் வழங்க முடிவு செய்யப்பட்டது.தற்போது, அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டது.டெண்டர் இறுதி செய்யும் பணி முடிந்து, அடையாள அட்டை அச்சிடும் பணி துவங்கி உள்ளது. இப்புதிய அட்டைகள், வாக்காளர்களுக்கு இம்மாதம் இறுதியில் வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment