ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 935 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு வந்தவர்களில் சுமார் 600 பேர் சரியான ஆவணங்களுடன் மதிப்பெண்ணில் திருத்தம் கோரியிருந்தனர். அவர்களது மதிப்பெண்ணில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.தேர்வுப் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் அநேகமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment