பள்ளிக்கூடங்களில் சதுரங்கபோட்டியை நடத்தும்படி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
ஜெயலலிதா
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி பள்ளிக்கூட மாணவர்கள், மாணவிகள் திறமையையும் ஆற்றலையும் வளப்படுத்துவதற்கும் அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 7 முதல் 17 வயதுள்ள பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சதுரங்கபோட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த வருடமும் போட்டிகள்
அதுபோல இந்த வருடமும் பள்ளிக்கூடம் முதல் மாநில அளவில் வரை சதுரங்க போட்டியை நடத்த வேண்டும். இந்த மாதம் 21–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் பள்ளிக்கூட அளவில் போட்டியை நடத்துங்கள். 25–ந்தேதி பள்ளி அளவில் முதல் 2 இடங்கள் பெற்றவர்கள், வயது பிரிவு வாரியாக ஒரு பிரிவுக்கு 2 பேர் வீதம், உரிய நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து குறுவட்ட செயலாளர் அல்லது உதவி தொடக்க கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். 31–ந்தேதி குறுவட்ட போட்டிகள் நடத்தலாம்.
ஆகஸ்டு மாதம் 7–ந்தேதி குறுவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்களின் விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 19–ந்தேதி கல்வி மாவட்ட அளவில் போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களின் விவர பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
செப்டம்பர் மாதம் 2–ந்தேதி மண்டல அளவில் போட்டி நடத்த வேண்டும். இதில் கல்வி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், வயது பிரிவு வாரியாக பங்கேற்கலாம். செப்டம்பர் மாதம் 9–ந்தேதி மண்டல அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
மாநில அளவிலான போட்டி
அக்டோபர் மாதம் மாநில அளவிலான போட்டியை நடத்த வேண்டும். அனைத்து போட்டிகளையும் முறையாக நடத்தி ஒவ்வொரு நிலையிலும் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும் அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வி.சி.ராமேஸ்வர முருகன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment