மாவட்ட துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். சென்னை, மாவட்டத் தலைநகரங்கள் உள்பட மாநிலம் முழுவதும் இதற்காக 557 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்கள் 3, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணியிடங்கள் 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள் 33, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்கள் 10 என மொத்தம் 79 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கான முதல்நிலைத் தேர்வில் பங்கேற்க மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டும் இந்தத் தேர்வில் பங்கேற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், அரசு அதிகாரிகள் தேர்வு மைய கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment