இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 1 முதல் 7 வரை பயிலும் 45.76 லட்சம் மாணவர்களுக்கு முதல் முறையாகக் கையெழுத்துப் பயிற்சி ஏடுகளும், 1 முதல் 9 வரை படிக்கும் 63.18 லட்சம் பேருக்கு கலைத் திறன், கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் பயிற்சி ஏடுகளும் அளிக்கப்படும்.
9, 10-ஆம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் பேருக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறைப் பயிற்சி ஏடுகள் அளிக்கப்படும். தொலைதூர, மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் நிகழாண்டில் 500 குழந்தைகள் பயன்பெற ஐந்து உண்டு, உறைவிடப் பள்ளிகள் நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படும். சமூக விழிப்புணர்வைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வுப் பேரணி, கிராம கல்வித் திருவிழா ஆகியவற்றை பள்ளிக்கல்வித் துறையும், காவல் துறையும் இணைந்து நடத்தி வருகின்றன. நிகழாண்டிலும் இந்தத் திட்டங்கள் தொடரும். குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க வசதியாக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆயிரத்து 175 கூடுதல் வகுப்பறைகளும், பெண் குழந்தைகளுக்கென தனியாக 270 கழிப்பறைகளும் கட்டித் தரப்படும்.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 46 ஆயிரத்து 737 பள்ளி செல்லாத குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 638 பேருக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. அவர்களில் 9 ஆயிரத்து 641 குழந்தைகளுக்கு உறைவிட வசதியுடன் கூடிய சிறப்புப் பயிற்சியும், மீதமுள்ளவர்களுக்கு உறைவிட வசதியின்றியும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். சிறப்புக் கவனம் தேவைப்படும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 641 குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், உதவும் உபகரணங்கள் வழங்கப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக நாள்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு நிகழ் கல்வியாண்டில் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
No comments:
Post a Comment