போதிய கல்வி தகுதி இருந்தும் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால், பல்வேறு சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் பிசிகல் டைரக்டர், அசிஸ்டெண்ட் பிசிகல் டைரக்டர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு தனிநபர் விளையாட்டுக்களான ஓடுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குழு விளையாட்டுகள் வரிசையில் ஹாக்கி, கால்பந்தாட்டம், வாலிபால், பேஸ்கட் பால் என அனைத்து விளையாட்டுகளின் வரலாறு, விதிமுறைகள், ஆடும் முறை ஆகியவற்றை கற்று கொடுக்கின்றனர்
. இதுதவிர, மைதானத்துக்கு அழைத்து சென்று பயிற்சியும் கொடுக்கின்றனர். ஆனால், இவர்கள் நான்-டீச்சிங் ஊழியராகத்தான் இன்று வரை கருதப்படுகின்றனர். இந்த துறையில், பி.எச்.டி.பட்டம் பெற்றிருந்தாலும் இதே நிலைதான். பிசிகல் டைரக்டர், அசிஸ்டெண்ட் பிசிகல் டைரக்டர் என்ற பெயரெல்லாம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. அதற்கு பதிலாக, இவர்கள் பிசிகல் டிரைனிங் இன்ஸ்ட்ரக்டர் என்று அழைக்கப்படுகின்றனர். எம்.பில், பி.எச்டி. பட்டம் பெற்று இருந்தும், யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் விதிப்படி இவர்கள் டீச்சிங் ஸ்டாப் என்ற வரையறைக்குள் இடம் பெறவில்லை. வகுப்பறையில் வைத்து மாணவர்களுக்கு போர்டு, சாக்பீஸ் ஆகியவற்றை கொண்டு பாடம் நடத்துபவர்கள்தான் டீச்சிங் ஸ்டாப் என்றும், இவர்கள் சாக்பீஸ் போன்றவற்றை பயன்படுத்தாத காரணத்தால், நான்-டீச்சிங் ஸ்டாப் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதனால், இவர்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வரையறுத்த கல்லூரி பேராசிரியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு, சம்பளம் மற்றும் விடுமுறையுடன் கூடிய படிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் எதுவும் பெற முடியாமல், பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஆனால், நூலகர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் போன்ற நான்-டீச்சிங் ஸ்டாப் ஊழியர்கள், யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். மேலும் துறை சார்ந்த தேர்வுகள் எழுதி, படிப்படியாக, ஜூனியர் அசிஸ்டென்ட், சூப்பிரடென்ட், பர்சர் என பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், வகுப்பறையில் பாடம் எடுக்காததை காரணம் காட்டி, பிசிகல் டிரைனிங் இன்ஸ்டிரக்டர்களுக்கு எம்.பில், எம்.பி.எட். போன்ற தேர்வுகள் எழுத வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால், இவர்கள் தங்களுடைய தகுதிகள் மற்றும் திறமைகளை வளர்த்து கொள்ள முடிவதில்லை. மேலும், இவர்கள் மிகவும் குறைவான கிரேடு சம்பளமான ரூ.2,800க்கு பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: எங்களிடம் முழு கல்வி தகுதி இருந்தும், கடந்த பல வருடங்களாக நான்-டீச்சிங் ஸ்டாப்பாகவே பணிபுரிந்து வருகிறோம். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிகிறோம். எங்கள் துறை சார்பில் இருந்து வந்த கோடை வகுப்பான எம்.பிஎட். படிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் ஆசிரியர்கள் ஆகும் நிலை மறுக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு எம்.பில்., எம்.பிஎட்., படிக்க சம்பளத்துடன் கூடிய வாய்ப்பும், அனுமதியும் தர வேண்டும்.
மேலும், பி.டி. ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.9,300 வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment