ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன் பேரில் புதிய லோக்பால் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. லோக்பால் சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவர கணக்கை தெரிவிப்பது தொடர்பாக நேற்று புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிமுறைப்படி மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உள்ள சொத்து விபரங்களை ஆண்டுதோறும் மார்ச் 31–ந்தேதி நிலவரப்படி தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி ஒரு ஊழியர் தான் வைத்துள்ள ரொக்கப் பணம் எவ்வளவு என்று சொல்ல வேண்டும். வங்கி வைப்புத் தொகைகள், கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதித் தொகை மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தனது சொத்து மட்டுமின்றி தன் மனைவி அல்லது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யார், யார் பெயரில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு வாகனங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளதோ அந்த விபரத்தையும் அரசு ஊழியர்கள் எழுதி கொடுக்க வேண்டும். இனி புதிதாக வேலைக்கு சேர்பவர்கள், வேலைக்கு சேரும் நாளில் தனக்குள்ள சொத்துக்கள் விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் ஏற்கனவே சொத்து விபரத்தை தாக்கல் செய்து வருகிறார்கள். என்றாலும் புதிய லோக்பால் சட்டத்தின் கீழும் அரசு ஊழியர்கள் சொத்து விவரக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆண்டுக்கான சொத்து விவரக்கணக்கு படிவத்தை வரும் செப்டம்பர் மாதம் 15–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்து, கடன் விபரங்களை ஜூலை 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் 4 மாதத் தொகை அல்லது ரூ.2 லட்சத்துக்கும் குறைவான சொத்து மதிப்பே இருந்தால் அந்த ஊழியர் சொத்து விவரக்கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய ஊழியர்களுக்கு மூத்த அதிகாரி விதிவிலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment