விரைவில் பயோமெட்ரிக் அட்டைகள் வழங்கப்பட உள்ள நிலையில், இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளை அடுத்த ஆண்டுக்கும் நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அனைத்து அட்டைகளுக்கும் உள்தாள் ஒட்டுவதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு கோடியே 83 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன.
அவற்றில் 10 லட்சம் குடும்பங்களைத் தவிர, மற்ற ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் அரிசி பெறுபவர்கள் ஆவர். இப்போது புழக்கத்திலுள்ள ரேஷன் அட்டைகளில் போலிகளைக் களையவும், உண்மையான பயனாளிகளைக் கண்டறியவும் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒவ்வொரு குடும்பத்தினரின் கருவிழி மற்றும் கைவிரல் ரேகை பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் பயோமெட்ரிக் ரேஷன் அட்டைகளைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றாலும், இந்த ஆண்டுக்குள் பயோமெட்ரிக் அடிப்படையிலான ரேஷன் அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாது என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உள்தாளே ஒட்டப்படும்: பயோமெட்ரிக் அட்டைகள் இல்லை என்பதால், வரும் ஆண்டிலும் (2015) இப்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளையே நீட்டிக்க உணவுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த அட்டைகளின் காலத்தை நீட்டிக்க வகை செய்திட அதனுள் உள்தாள்கள் ஒட்டப்படும். இதற்கான முடிவுகளை உணவுத் துறை அதிகாரிகள் எடுத்துள்ள நிலையிலும் விரைவில் அதற்கான அரசு உத்தரவு வெளியிடப்படும் என்று தெரிகிறது. மானியக் கோரிக்கையில் தகவல்: கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப் பேரவையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.
அப்போது, இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், பயோமெட்ரிக் வழியிலான ரேஷன் அட்டைகள் தயாரிப்புப் பணிகளின் நிலவரம் குறித்தும் அரசின் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment