உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பண்டிகைக் கால முன்பணம் பெற முடியாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பண்டிகைக் கால முன்பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இந்த முன் பணம் வாங்க விரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் தலைமை அதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்தால், அவர்களுக்கு, கருவூலகம் மூலம், முன்பணம் வழங்கப்படும்.
இந்த தொகை, மாத சம்பளத்தில், தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும். இந்தாண்டு தீபாவளிக்கு, அரசு ஊழியர்களுக்கு முன் பணம் வழங்க, ஒவ்வொரு துறைக்கும், குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பலர், பண்டிகைக் கால முன் பணத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில், 60 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம், 3,600 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 500 பேருக்கு மட்டும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், பண்டிகை கால முன்பணம் பெற விண்ணப்பித்தவர்களில், பலருக்கு, போதிய நிதியில்லை என, மறுக்கப்பட்டுள்ளது. இதே நிலையே மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது. வட்டியில்லாக் கடனாக கிடைக்கக் கூடிய, இந்த முன் பணத்தைப் பெற்று, தீபாவளியை கொண்டாடலாம் என, இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment