தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின் முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, அவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரைப் பற்றிய, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. மாநிலத்தில், பிளஸ் 2 வரை, 1.3 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இதுவரை, 1.2 கோடி மாணவ, மாணவியரின் விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார். இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது:
இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, படிப்படியாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்கள் குறித்த விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மாணவர், ஒரு பள்ளியை விட்டு, வேறொரு பள்ளியில் சேர, "ஸ்மார்ட் கார்டை' பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், ஒரு மாணவர், தற்போது என்ன வகுப்பு படிக்கிறார்; படிக்கிறாரா, இல்லையா; படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாரா என்பது உட்பட, அனைத்து தகவல்களையும், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு முறை மூலம் அறிய முடியும். அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பணிகளையும், இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்க முடியும். இவ்வாறு, செயலர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment