அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன், நேற்று ஆய்வு செய்தார். தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் வகையிலும், தனியார் பள்ளிகளுக்கு, மாணவர்களை செல்வதை தடுத்து நிறுத்தும் வகையிலும், அரசு பள்ளிகளில், படிப்படியாக ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும் என, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எத்தனை அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பது குறித்து, பள்ளி கல்வித் துறைக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர், பழனியப்பன், நேற்று, சென்னையில் ஆய்வு செய்தார்.
சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன், அமைச்சர், ஆலோசனை நடத்தியபோது, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அதிகாரிகள் முன்கூட்டியே, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அமைச்சர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment