அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 5,065 அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள்; 1,549 நடுநிலைப் பள்ளிகள்; 640 உயர்நிலைப் பள்ளிகள்; 1,141 மேல்நிலைப் பள்ளிகள் என, 8,395 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, இந்த இடங்கள் காலியாக உள்ளன. அரசு பள்ளிகளில், இலவச சீருடை, சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட, 14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதே திட்டங்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களை செயல்படுத்தவும், வினியோகம் மற்றும் இருப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய பதிவேடுகளை பராமரிக்கவும், நிதியுதவி பெறும் பள்ளிகளில், பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகிகள், வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது, காலி பணியிடங்களை நிரப்ப, அரசு முடிவெடுத்துள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""குழு ஒன்றை நியமித்து, பள்ளி வாரியாக உள்ள காலி பணியிடங்கள் குறித்து, ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனடிப்படையில், காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment