""வரும் லோக்சபா தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், செப்.,1 ல் வெளியிட உள்ளதால், வீடுவீடாக சென்று, வாக்காளர்களை சேர்க்க,'' தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்காக, சட்டசபை தொகுதி வாரியாக, அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள், புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள், அதில் பிழை இருந்தால், அவற்றை திருத்தி வழங்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை செய்து, லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் பொருட்டு, செப்.,1 ல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த மனுக்களுடன், ஆக.,15 வரை வீடு வீடாக சென்று, அப்பணிகளை செய்ய வேண்டும். அதற்கு பின், 15 நாட்களுக்குள், மாநில அளவில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 58 ஆயிரத்து 761 புதிய ஓட்டுச்சாவடிகளையும், ஒருங்கிணைத்து வாக்காளர் பட்டியல் தயாரித்து, கமிஷனுக்கு அனுப்பவேண்டும். இதைவைத்து, 2014 லோக்சபா தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் செப்.,1ல் வெளியிடப்படும், என, கலெக்டர்களுக்கு விடுத்துள்ள உத்தரவில், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment