பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் அதிகளவில் மாணவர்கள் தொடர்ந்து தோல்வியடைகின்றனர். இதையடுத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் முடிவு எடுத்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து செப்டம்பர் 15 வரை பயிற்சிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாடப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் சென்னையில் வரும் 12-ம்தேதி வரை பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 2 கல்லூரி பேராசிரியர்கள், 2 மூத்த முதுநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர் என 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 30 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 160 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களோடு ஆலோசனை நடத்தி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளனர்.
என்ன மாதிரியான பயிற்சி? ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கடினமான பகுதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் தரப்படும். மாணவர்களுக்கு அந்தப் பகுதிகளை எப்படி எளிமையாகப் புரியவைப்பது, அந்தப் பகுதி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதன் நோக்கம், தேர்வில் அந்தப் பகுதியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். ஆசிரியர்களுக்கான இந்தப் பயிற்சி மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கும், கிராமப்புற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் முதல் முறையாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment