""விரைவில், 1,690 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்,'' என, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு கூறினார். அவர் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் முதல், 10,550 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். புதிய கட்டண விவரங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என, நிர்வாகிகளிடம் கூறியிருந்தோம். ஆனால், பல பள்ளிகள், புதிய கட்டண விவரங்களை வெளியிடவில்லை என, புகார் வந்துள்ளது.
அதேபோல், சில பள்ளிகள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்தாகவும் புகார்கள் வந்தன. புகார் வரும் பள்ளிகள் மீது, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இன்னும், 1,690 பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இந்த பள்ளிகளுக்கு, இருமுறை அழைப்பு விடுத்தபோதும், அவர்கள் வரவில்லை. தற்போது, மீண்டும், "நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். இன்று (நேற்று) முதல், தொடர்ந்து விசாரணை நடக்க உள்ளது.
செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ, இந்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, சிங்காரவேலு கூறினார். புதிய கட்டணம் : இதற்கிடையே, மூன்றாவது கட்ட புதிய கட்டண விவரங்களை, கட்டண நிர்ணய குழு, நேற்று, தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிட்டது. இதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக, புதிய பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு சேர்த்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment