பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய நுழைவுத் தேர்வு நடத்தும் பல் மருத்துவக் கவுன்சிலின் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிடிஎஸ். , மற்றும் எம்டிஎஸ். படிப்புகளுக்கு தேசியத் தகுதி நுழைவுத் நடத்துவதாக வெளியாகியிருக்கும் மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால், தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 30.7.2012 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கும் முதல்வர், பல் மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பால், மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். அதனால், பல்மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment