ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) நடைபெறுகிறது. முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சனிக்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற உள்ளது.
இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மண்டலத்திலும் ஓர் இடத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2,448 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல் தாளில் 1,735 பேரும், இரண்டாம் தாளில் 713 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்: முதல் தாள், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, அழைப்புக் கடிதங்களைக் கொண்டு வர வேண்டும். முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (புதுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்), மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்குரிய சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும்.
இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்: எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், இளநிலைப் பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், பி.எட். மதிப்பெண் சான்றிதழ், தமிழ் பண்டிதர்களாக இருந்தால் அந்தத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்றிதழ், நடத்தை சான்றிதழ் ஆகிய ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும். அனைத்தும் அசல் சான்றிதழ்களாக இருக்க வேண்டும்.
4 மண்டல அதிகாரிகள் நியமனம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இந்தப் பணியை மேற்பார்வையிட 4 மண்டலங்களுக்கும் தலா ஓர் மண்டல அதிகாரி வீதம் 4 மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் (மண்டலம், மாவட்டங்கள், மண்டல அதிகாரி, நடைபெறும் இடம்):
1. கோவை மண்டலம் - கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் எஸ்.அன்பழகன் - ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குகை, சேலம்.
2. சென்னை மண்டலம் - சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி - ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.
3. திருச்சி மண்டலம் - அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் - ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஏ.சங்கர் - அனைவருக்கும் கல்வித் திட்ட கருத்தரங்க அறை, திருச்சி.
4. மதுரை மண்டலம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி - ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராமவர்மா - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை.
மறுதேர்வு எழுதுவோருக்கு திங்கள்முதல் ஹால் டிக்கெட் ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.
அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment