பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. தாம்பரத்தில் உள்ள சீயோன் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து ஜூலை 25ம் தேதி சிறுமி சுருதி பலியானதை அடுத்து, தானாக முன்வந்து இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அது உத்தரவிட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்காக இயங்கும் வாகனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கி, அதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி பெற்று இன்று தாக்கல் செய்தது.
நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.
அதில், பள்ளி வாகனங்களுக்கான மாநிலம் முழுவதுமான விதிமுறையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி,
* பள்ளி வாகனத்தில் ஓட்டுநருடன், உதவியளர் ஒருவரும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
* பள்ளி வாகனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
* கல்வி நிறுவன வாகனங்களை மாவட்டந்தோறும் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
* பள்ளிகள் அளவில் பள்ளி வாகனங்களைக் கண்காணிக்க குழுவை அமைக்க வேண்டும்
. * அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஒருவர் பள்ளி வாகனக் கண்காணிப்புக் குழுவிலும் இருக்க வேண்டும்
. * வாகன பராமரிப்புக்காக பள்ளிகளில் சிறப்பு பிரிவு இயங்க வேண்டும் -
இவை உள்ளிட்ட 11 விதிமுறைகள் அடங்கிய அறிக்கை தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை அனைத்து பள்ளிகளிலும் ஒட்ட வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.
No comments:
Post a Comment