பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அக்டோபர் சிறப்புத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) முதல் புதன்கிழமை (செப்டம்பர் 12) வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
இணையதளத்திலிருந்து பூரத்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான சலானை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி தேதி செப்டம்பர் 13-ம் தேதி ஆகும்.
இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தனித்தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி, அவர் இறுதியாகப் பயின்ற பள்ளி அல்லது அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும். அதன் பிறகு, அரசுத் தேர்வுகள் மண்டல அலுவலக முகவரிக்கு இந்த விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் உரிய இணைப்புகளை பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாகவோ செப்டம்பர் 18-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கத் தகுதி: மேல்நிலைத் தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் (எச் வகை). பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் செப்டம்பர் 1-ம் தேதியோடு பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் (எச்பி வகை). நேரடித் தேர்வர்கள் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடங்களுடன் பொருளியல், வணிகவியல், கணக்கியல், இந்தியக் கலாசாரம் போன்ற 4 தொகுப்புகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வு எழுதுவோர் (எச் வகை) - ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தர்வர்கள் (எச்பி வகை) - தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2 மொத்தம் ரூ.187.
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். அந்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை கோர் பேங்கிங் சேவை உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் தொகையைச் செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் உள்ள விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுத் துறையிடம் எந்தவொரு சந்தேகத்துக்கும் முறையீடு செய்யவோ, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து தனித்தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: எச் வகையினர் - தேர்வுக் கட்டணம், இதரக் கட்டணம் செலுத்தியதற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான், சான்றொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளித் தலைமையாசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்களுக்கு மட்டும்). எச்பி வகையினர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சலான், பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழின் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்). பதிவஞ்சல் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்டங்கள்: அரசு மண்டல தேர்வு இயக்கக அலுவலகங்களின் முகவரி நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி - அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், தீயணைப்பு சாலை, கவுண்டம்பாளையம், கோவை-641030. திருவண்ணாமலை, வேலூர் - அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், 872, ஆர்க்காடு சாலை, சத்துவாச்சாரி, வேலூர் - 632009.
No comments:
Post a Comment