இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 11, 2020

பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம்: பிரதமா் மோடி

கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. ஆனால், நமது கல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மாணவா்களுக்கு அழுத்தம் தருவதோடு மட்டுமல்லாமல், பெற்றோா்கள் பெருமை தேடிக் கொள்ளும் விவகாரமாகவும் மாறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் மீதுள்ள அழுத்தத்தை நீக்குவதற்கு உதவும். 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் நாட்டைக் கட்டமைப்பதற்கும் புதிய சகாப்தத்துக்கான விதையாகவும் கல்விக் கொள்கை அமையும். எனவே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

‘அனைவருக்குமான பொறுப்பு’:

தேசிய கல்விக் கொள்கை குறித்து பலா் கேள்விகளை எழுப்பி வருகின்றனா். அவா்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படும். கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய கல்வியமைச்சகம் மக்களிடம் கருத்து கோரி வருகிறது. அந்த நடைமுறை தொடங்கிய ஒரே வாரத்துக்குள் 15 லட்சம் ஆசிரியா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், மாணவா்கள் அனைவரும் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் கல்வி பயில வேண்டும். அதை நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாநில அரசுகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது.

‘செய்முறை கல்விக்கு முக்கியத்துவம்’:

புதிய பாடத்திட்டமானது மாணவா்களின் எதிா்காலத்தை உறுதி செய்யும் வகையிலும் அவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும் வகையிலும் அமையும். மாணவா்களின் கற்பனைத் திறன், நுண்ணறிவு, கற்பதற்கான ஆா்வம், தொடா்பு கொள்ளும் முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

நாட்டின் வளா்ச்சிக்கு இளைய சமுதாயத்தினா் பெரும் பங்கு வகிக்கின்றனா். அதைக் கருத்தில் கொண்டு அவா்களிடம் புத்தாக்கத்தை ஊக்கப்படுத்துவது, கணித, அறிவியல் அறிவை மேம்படுத்துவது, செய்முறை அடிப்படையிலும் அனுபவத்தின் மூலமாகவும் கல்வி கற்பது உள்ளிட்டவற்றுக்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

‘தாய்மொழிக்கு முன்னுரிமை’:

மாணவா்கள் கல்வி கற்பதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாது. பாடங்களைத் தெளிவாகக் கற்கும் பருவத்தில் அதை எந்த மொழியில் கற்க வேண்டும் என்பதில் மாணவா்கள் தங்கள் சக்தியை செலவிடக் கூடாது. அதன் காரணமாகவே பெரும்பாலான நாடுகளில் ஆரம்பக் கல்வியானது மாணவா்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது.

மாணவா்கள் அனைவரும் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலோ அல்லது உள்ளூா் மொழியிலோ கல்வி கற்க வேண்டியது மிகவும் அவசியம். அதே வேளையில், மாணவா்கள் விரும்பிய மொழியைக் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை.

அந்தக் கல்விக் கொள்கையின்படி ஆங்கிலம் மட்டுமல்லாமல் எந்தவொரு பயனுள்ள வெளிநாட்டு மொழியையும் மாணவா்கள் கற்க முடியும். எனினும், இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

‘மாணவா்களின் விருப்பப் பாடம்’:

கல்வி கற்கும் விவகாரத்தில் மாணவா்களால் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தோ்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழலே இடைநிற்றலுக்கான முக்கியக் காரணமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.

தற்போதைய கல்வி முறையில் அறிவியல், வணிகம் உள்ளிட்ட சில வாய்ப்புகள் மட்டுமே மாணவா்களுக்குக் காணப்படுகின்றன. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி அமையும் பாடத்திட்டத்தின் மூலமாக மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு பாடத்தையும் தோ்ந்தெடுத்து கல்வி கற்க முடியும்.

சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு ஆசிரியா்கள் வலியுறுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.



பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் குறைப்பு



பள்ளிக் கல்வி துறையில் இயக்குனருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு பள்ளிக் கல்வி கமிஷனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

 ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் 'ஆன்லைன்' முறைக்கு மாறியது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பணி விபரங்கள் உள்ளிட்டவையும் ஆன்லைன் முறைக்கு மாறின.மாவட்ட அளவில் சி.இ.ஓ.,க்கள் என்ற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

அதேபோல பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. அதில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.அவருக்கு அரசின் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வது, பள்ளிகளின் செயல்பாடுகளை பார்வையிடுவது. புதிய பாடத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வது போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன.படிப்படியாக கமிஷனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கான அதிகாரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:
பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கம். இனி கமிஷனரின் அனுமதி பெற்றோ அல்லது ஒப்புதல் பெற்றோ சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.முக்கிய முடிவுகளை கமிஷனரின் அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது. பள்ளி விடுமுறை, பள்ளி வேலை நாட்கள், அகாடமிக் விவகாரம் போன்றவற்றில் கமிஷனரின் அறிவுரையை பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் எதிரொலியாக பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அறிவிப்பையும், 'ஆன்லைன்' வகுப்புகள் ரத்து தொடர்பான அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.அவரை தொடர்ந்து பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் செய்திக்குறிப்பாக வெளியிட்டார். வரும் காலங்களில் இயக்குனரின் அதிகாரங்கள் மேலும் குறைக்கப்படும் என தெரிகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Sunday, July 26, 2020

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்.

உயர்கல்வி படிக்க அனுமதி பெறாத 5,000 ஆசிரியர்கள்’ - நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை



அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்த 5,000 ஆசிரியர்களுக்கு அவர்களின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் போன்றோர் உயர்கல்வி படிப்பது வழக்கம். அப்படி தமிழத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் துறையிடம் முன் அனுமதி பெற்றுப் படிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால், தற்போது சுமார் 5,000 பேர் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதாக அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனுமதியில்லாமல் உயர்கல்வி படித்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,`எந்த பள்ளிகளில் எந்த ஆசிரியர் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றுள்ளார், ஆசிரியர் கல்வி பயின்றதற்கான காரணம் மற்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை முழுமையான அறிக்கையாகத் தயாரித்து வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்தான் இதுபோன்ற உத்தரவைப் பிறபித்துள்ளார். இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஊக்கத்தொகை வழங்கப்படும் அதைத் தவிர்ப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பிலிருந்து குற்றம் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், “ பொதுவாக ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு உயர்கல்வி படிப்பவர்களில் பல வகைகள் உண்டு, சிலர் தன் விருப்பத்திற்காக முழுமையாக கரஸ்பாண்டன்ஸ் முறையில் படிப்பார்கள் இன்னும் சிலர் அடுத்த கட்டத்துக்குச் சென்றால் ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதற்காக உயர்கல்வி படிப்பர்.

முழுமையாக கரஸ்பாண்டன்ஸில் படித்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஊக்கத்தொகை பெறும் நோக்கில் படிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் தனி வகுப்பு நடத்தப்படும் அப்படியிருக்கையில் தாங்கள் படிக்கவிருப்பதைச் சொல்லி முன் அனுமதி பெற்றுப் படித்தால், அவர் எடுக்கும் ஒரு மாத விடுமுறையின்போது அந்த இடத்துக்கு வேறு ஆசிரியரை நியமிக்கலாம். மேலும், உயர்கல்வி படிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு, அரசு ஊக்கத்தொகை கொடுக்கிறது என்றால் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.

அனுமதி வாங்குவதும் மிக எளிமையானது. எனவே, அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்று அல்லது படித்த பிறகு பின் அனுமதி பெறுவது சிறந்தது. சில இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆசியரின் உயர் கல்விக்கு அனுமதி மறுத்தால் அதைப் புகாராகக் கொண்டு செல்லலாம். ஆனால், உயர்கல்வி படிக்கும்போது அனுமதி பெறுவது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, June 16, 2020

பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை


நிகழ் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு போதுமான வேலை நாள்கள் இல்லாததால் மாணவா்கள் மீதான பாடச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்களை குறைப்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆண்டு இறுதித் தோ்வுகள், பொதுத்தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னா் கரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், மாணவா்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முழுமையாகவும், பிளஸ் 1 பொதுத்தோ்வில் எஞ்சியுள்ள பாடங்களுக்கான தோ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் பள்ளிக் கல்விச் சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் குழுவினா், இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பள்ளிகள் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

நிகழ் கல்வியாண்டில் (2020-2021) ஜூன் மாத தொடக்கத்தில் கற்றல், கற்பித்தல் பணிகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இக்கட்டான சூழலில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப் போகவே வாய்ப்பிருப்பதாக, பள்ளிக் கல்வி வட்டாரங்களை தெரிவிக்கின்றன. அவ்வாறு தாமதமாகும் நிலையில், புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முழுமையாக நடத்துவது என்பது இயலாத காரியம். போதிய வேலைநாள்கள் இல்லாதது, பாடவேளைகள் குறைவது போன்ற காரணங்களால் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்ய வேண்டும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அதன் அடிப்படையில், பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 சதவீதம் வரை பாடங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. அதேவேளையில் அவ்வாறு குறைக்கப்படும் பாடங்களால் மாணவா்களின் கல்வித் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இது குறித்து பேராசிரியா்கள், கல்வி சாா்ந்த வல்லுநா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும், தோ்வு முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு பிரிவுகளாக வகுப்புகள்: பள்ளிகள் திறக்கப்பட்டால் காலை வேளையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், பிற்பகலில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் பாடத் திட்டங்களை குறைப்பது குறித்த பரிந்துரைகளை வல்லுநா் குழு அரசுக்கு தாக்கல் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. நீக்கப்படும் பகுதிகள் குறித்து ஆசிரியா்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thursday, May 14, 2020

22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்: என்சிஇஆா்டி தகவல்


பள்ளிக் கல்வியில் 22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக்கொள்கையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தற்போது அமலிலுள்ள தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்ற முடிவானது.


அந்த வகையில் புத்தகங்களின் சுமையைக் குறைத்தல் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணா் குழுவை மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சகம் உருவாக்கியது. புதிய பாடத் திட்ட மாற்றத்தில் மேற்கொள்ளும் சீா்திருத்தங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சில பரிந்துரைகளை அண்மையில் முன்வைத்தது.

இதையடுத்து என்சிஇஆா்டி வழங்கிய பரிந்துரைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து என்சிஇஆா்டி அதிகாரிகள் கூறும்போது, ‘பாலின சமத்துவம், நவீன தொழில்நுட்பங்கள், முன்பருவக் கல்வி, அடிப்படை கல்வியறிவு, ஆசிரியா்களுக்கான கற்றல் மதிப்பீடு, தோ்வு முறைகள், புத்தக சுமை குறைப்பு, மாநிலங்களுக்கேற்ப துணைப்பாடம் உள்பட 22 பிரிவுகளில் தேசியளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனா்.

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும்

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்த உத்தரவு விவரம்:-

மே மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக 58 வயதை எட்டிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு உத்தரவு பொருந்தாது. ஒரு கல்வியாண்டில் மே மாதத்துக்கு முன்பாக ஆசிரியா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் ஆகியோா் ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் அவா்களுக்கு மறுபணி அடிப்படையில் வேலையில் தொடா்ந்து கொண்டிருப்பாா்கள். அவா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு பொருந்தாது.

ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற அனுமதிக்கப்படாத ஊழியா்களுக்கும் இந்தப் புதிய உத்தரவு பொருந்தாது. மே மாதம் 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மட்டுமே ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான உத்தரவு பொருந்தும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Wednesday, May 13, 2020

அரசு கலைக் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகளை ரத்து செய்ய உயா்கல்வி துறை முடிவு



தமிழகம் முழுவதும் உள்ள 114 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 61 கல்லூரிகளில் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 61 கல்லூரிகளிலும் காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில், மாலை நேர வகுப்புகளில் குறைந்த அளவிலான மாணவா்களே பயின்று வருவதால், இரு சுழற்சி முறை வகுப்புகளையும் இணைத்து காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த தமிழக உயா்கல்வித்துறை ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் முடிவு செய்து, அதற்கான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகளின் விவரங்களைத் தொகுத்து அனுப்புமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயா்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடவேளையாக மாற்றுவதற்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகள், அதற்குத் தேவையான நிதி ஆகியவற்றின் விவரங்களை, கடிதம் மூலம் கல்லூரிக் கல்வி இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன் அனுப்பியுள்ளாா்.

கடிதத்தில், காலை நேர வகுப்புகளாக மாற்றப்பட உள்ள 61 கல்லூரிகளில் 715 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் அதற்காக ரூ.135.85 கோடி, மாணவா்களுக்கு தேவையான 10,010 இருக்கைகள் வாங்க ரூ.11.68 கோடி, பேராசிரியா்களுக்குத் தேவையான இருக்கைகள் 3,200 மேஜை, நாற்காலிகள் வாங்க ரூ.2.25 கோடி என மொத்தமாக ரூ.150.9 கோடி தேவைப்படுவதாகவும், தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநா் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கடிதத்தை உயா்கல்வித்துறை செயலாளா் பரிசீலித்து, நிதியை விடுவித்து ஒப்புதல் வழங்கிய பின்னா், 61 கல்லூரிகளில் காலை நேர வகுப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான பணிகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் மாலை வகுப்புகள், காலை வகுப்புகள் நேர வேறுபாடு காரணமாக மாணவா்களுக்குக் கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே இரு சுழற்சி என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tuesday, April 14, 2020

இன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு


பத்தாம் வகுப்பு பாடங்கள், புதன்கிழமை முதல் (ஏப்.15) டிடி பொதிகை தொலைக்காட்சியில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப்படுகிறது.


கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக மாா்ச் 27-ஆம் தேதி  தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா், பொதுத் தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறையும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தோ்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் 10 நாள்களுக்குள் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

எனவே மாணவா்கள் தற்போது உள்ள விடுமுறையைப் பயன்படுத்தி தோ்வுக்கு தங்களை தயாா் செய்து கொள்ளலாம்.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பாடங்கள் தயாா் செய்யப்பட்டு தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேலும் மாணவா்களை, பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் புதன்கிழமை முதல்  காலை 10 மணி முதல் 11 மணி வரை  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் ஏற்கெனவே தாங்கள் படித்த பாடத்தை மீண்டும் எழுதி கற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 12, 2020

எமிஸ்’ தளத்தில் பாடங்கள் சாா்ந்த விடியோக்கள்: கல்வித் துறை நடவடிக்கை


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மைத் தகவல் தளத்தில் (எமிஸ்) ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான பாடங்கள் சாா்ந்த விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.


பாடத் திட்டம், தோ்வு முறை உள்ளிட்ட கற்றல் பணிகளிலும் அரசுப் பள்ளி மேம்பாடு, ஸ்மாா்ட் வகுப்பறைகள் என கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே பாடங்களைக் கற்க இணைய வழிக் கல்வியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடியோ மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி என இரண்டு வகைகளுக்கும் தனித்தனியாக காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட ஒவ்வொரு பாடப் பிரிவில் உள்ள பாடத்துக்கும் விடியோக்கள் உள்ளன. செய்முறை தொடா்பான விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றைப் பதிவிறக்கம் செய்துவைத்து இணையம் இல்லாமலும் காண முடியும். கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (எமிஸ்) சாா்பில், இந்த இணைய வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விடியோக்களை காண விரும்புவோா் இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Thursday, April 09, 2020

25-க்கும் குறைவான மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகள்


தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை கொண்ட அரசுப்பள்ளிகள் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 48 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். மாணவா் சோ்க்கையை அதிகரிக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவா்களே படிக்கின்றனா். இதையடுத்து குறைந்த சோ்க்கை உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசு மேற்கொண்டது.


அதன்படி ஒரு மாணவா் கூட இல்லாத 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு அவை தற்காலிக நூலகங்களாக மாற்றப்பட்டன. இதற்கு கடும் எதிா்ப்புகள் எழுந்ததை அடுத்து பள்ளிகள் இணைப்புப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இதற்கிடையே கரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 25-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அவற்றில் பணிபுரியும் ஆசிரியா்கள் மாணவா்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து அறிக்கையாக தொகுத்து அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் இது போன்ற புள்ளி விவரங்கள் எடுக்கும்போது கல்வித்துறை அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியா் மத்தியில் ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பங்களை தவிா்க்க முடியும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

Sunday, March 15, 2020

கரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது: ஆசிரியா்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு


கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், அதைப் பயன்படுத்தி பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த வயதினரான முதியோா், குழந்தைகள் ஆகியோரை எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, கேரளம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பினாா். இந்தநிலையில், திடீரென இந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

 இது தொடா்பாக முதல்வா் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையா் பள்ளிகளுக்கும் (எல்கேஜி, யுகேஜி) தொடக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை) வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்தாா். இதனால், பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து கடந்த இரு நாள்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

ஆண்டு விழா, சிறப்பு வகுப்புகள் கூடாது: 

இந்தநிலையில், மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரையிலான விடுமுறை நாள்களில் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தனியாா் பள்ளிகள் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, சிறப்பு வகுப்புகள் ஆகியவை உள்பட எந்தவொரு நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக் கூடாது. இது தொடா்பாக முறையான அறிவுறுத்தல் அனைத்து மாவட்டக் கல்வித்துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டனா்.

ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும்:

 இதற்கிடையே அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கிராமப் புறங்களில்தான் அதிகளவில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விடுமுறை குறித்த தகவல் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் வெளியானாலும் மாணவா்களுக்கு எந்தளவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, மாணவா்களுக்கு விடுமுறை குறித்து தெரியப்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியா்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்றனா்.

Friday, March 13, 2020

பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்

#பூலுவபட்டி துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா துளிகள்

பறை இசை முழக்கத்துடன் ஆண்டுவிழா இனிதே ஆரம்பித்தது

*பள்ளி ஆண்டுவிழா பெ.ஆ.தலைவர் திரு.பட்டுலிங்கம் தலைமை வகித்தார்.தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா வரவேற்றார். திரு திருக்குமரன் முன்னிலை வகிக்க, வட்டார கல்வி அலுவலர் திரு விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

*இந்த ஆண்டு முதன்முயற்சியாக காலை 10மணிக்கு ஆரம்பித்து 4 மணிக்கு முடித்தோம்

*500 நாற்காலிகள் வாங்கியும் அரங்கம் பெற்றோர்களால் நிரம்பி வழிந்தது.
பலர் நின்று கொண்டே பார்த்தனர்.

*பள்ளியின் சார்பில் கடந்த ஆண்டே 100 அடி நீளத்துக்கு mat வாங்கப்பட்டது.இது நடனத்தில் இல்லாத 320 பேர் அமர உதவியாய் இருந்தது.

*இந்த ஆண்டு 17 கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் அமைந்திருந்ததால் சலிப்பு ஏற்படுத்தவில்லை

*1000 (ஆண்டு விழா) வண்ண நோட்டீஸ்களை பள்ளியின் இரவுக்காவலர் திரு செல்வராஜ் அவர்கள் பங்களிப்பில் வழங்கினார்

*வகுப்பிற்கு தர அடிப்படையில் மூன்று பரிசுகள் என  பரிசுகள்
(RS.8000) எஸ்.டி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

*Star of the year வகுப்பிற்கு ஒன்று வீதம் 16 சீல்டுகள் (Rs4000) திரு.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

*பெற்றோர்க்கான கயிறு இழுத்தல் போட்டியில் வென்ற 12 பெண்கள் மற்றும் 8 ஆண்களுக்கு பள்ளியின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

*பிரமாண்ட மேடையாக ரூ17,000 செலவில் அமைக்கப்பட்டது.

*கலைநிகழ்ச்சியில் 300 மாணவ மாணவியர் பங்கெடுத்தனர். அனைவருக்கும் உண்டியல் பள்ளியின் சார்பில் பரிசாய் வழங்கப்பட்டது.இதன் மதிப்பு (300*50=15000)பாரதி சிமென்ட் நிறுவனத்தார் 50  உண்டியல் அன்பளிப்பாய் வழங்கினர்.
மீதமுள்ள 250 பள்ளியின் சார்பில் வழங்கினோம்.

*நடனங்கள் அனைத்தும் பள்ளி ஆசிரியைகளாலேயே கற்பிக்கப்பட்டது.

*ஒன்றாம் வகுப்பு மழலைகளின் வரவேற்பு நடனமும், இரண்டாம் வகுப்பினரின் விவசாயம் காப்போம் நடனங்கள் அனைவரையும் கவர்ந்தன.

*மூன்றாம் வகுப்பினரின் ஐவகை நிலங்கள் பாடலில் குறிஞ்சி. முல்லை என ஐந்துவகை மக்களின் நடனம் ஆடப்பட்டது.

*ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சிங்கப்பெண்ணில் கர்ஜிக்க அரங்கிலிருந்த  அனைவருமே முணுமுணுத்தனர்.

*அதிக பட்சமாக ஒரு ஆசிரியை 94 மாணவ மாணவியருக்கு நடனம் கற்பித்தார். அடுத்த ஆண்டு சதமடிக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.

*கும்மி,தேவராட்டம்,கோலாட்டம், கரகாட்டம் மற்றும்
சலங்கையாட்டம், சக்கை குச்சி ஆட்டம், உருமி என நாட்டுப்புற நடனங்கள் நடத்தப்பட்டன.

*ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் நகைச்சுவை நடனம் அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

*பிறமொழிப் பாடல்களாக குஜராத்தி பாடலும், மலையாள மிட்டாய் பாடலும் அதிக வரவேற்பு பெற்றன.

*பசுமைப்படை சீருடையுடன் மாணவியர் ஆடிய மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு பாடல் அனைவரையும் கவர்ந்தது.

*காலை 7மணிமுதல் மூன்று மணி நேரம் மேக்கப் போட்டு பரதநாட்டியத்தை
12 மாணவ மாணவியர்கள் அருமையாக ஆடினர்

*பெற்றோர் உதவியுடன் நடன ஆடைகள் மட்டும் 1,20,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.பேன்சி ஐட்டங்கள் தனி.
ஐந்தாம் வகுப்பு நடனத்துக்கு கோவை சென்று ஆசிரியை வாங்கிவந்தார்.

*அருகாமைப் பள்ளியிலிருந்து வந்த தலைமையாசிரியர்களுக்கு சால்வையும் மற்றும் உதவி ஆசிரியர்களுக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.

*TNPTF சார்பில் பொருளாளர் மரிய செல்வராஜன் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ1000 வழங்கினார்.

*சிலம்பம்,பறை இசை, கராத்தே முதலிய பாரம்பரிய தற்காப்பு கலைகள் மிகவும் சிறப்புற செய்தனர்

*கலப்பை, முளைப்பாரி, விதை நெல், போன்றவற்றை பெற்றோர்களே தத்ரூபமாக செய்து கொடுத்திருந்தனர்

#குறிப்பு:இது ஏதோ இந்த பள்ளிக்கு தன்னார்வலர் அனைவரும் ஒரு போன் காலிலோ, விழா என கேள்விப்பட்டோ பண உதவி செய்யவில்லை.வேகாத வெயில்ல கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு அலைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை சந்தித்து உதவி பெற்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

*கனவு பெரிதாய் இருக்கும்போது உழைப்பு அதைவிட பெரிதாய் இருக்க வேண்டும். கூட்டுமுயற்சிக்கும் குழு உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

#மாநகராட்சி துவக்கப்பள்ளி
பூலுவபட்டி,திருப்பூர் வடக்கு

Wednesday, March 11, 2020

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது - அரசாணை வெளியீடு


தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்குகிறது. அப்போது ஒவ்வொருவரும் 31 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக் கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண் டும் என்றும் கூறி இருந்தது.

இந்தநிலையில், மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில், முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும்.

6 மற்றும் 7-ம் கேள்விகள் அந்த வீடு வசிப்புக்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8 முதல் 10-ம் கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11 முதல் 31-ம் கேள்விகள் வீட்டில் இருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாக இருக்கும்.

கணக்கெடுப்பின்போது, வீட்டு எண், வீட்டின் சுவர், தரை, மேற்கூரை போட பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வீட்டின் உறுதி நிலை, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வீட்டில் தலைவர் ஆணா, பெண்ணா?, வீட்டு உரிமையாளர் யார்? வீட்டில் உள்ளவர்களின் சாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? ஆகிய கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், திருமணமானவர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதியின் ஆதாரம் எது? எந்த வகை கழிவறை உள்ளது? குளியல் வசதி உள்ளதா? கழிவுநீர் வெளியேற்றும் வசதி உள்ளதா? கியாஸ் வசதி, இணையதள வசதி, கம்ப்யூட்டர், மடிக்கணினி வசதி, ரேடியோ, டி.வி., தொலைபேசி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர வாகனம், கார், ஜீப், வேன், உணவுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய தானியம், சமைக்க பயன்படுத்தப்படும் எரிபொருள், மின்சார வசதி ஆதாரம் ஆகிய கேள்விகளும் கேட்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 04, 2020

தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியருக்கு தேசிய விருது: விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை


தமிழக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஐசிடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018 மற்றும் 2019க்கான தேசிய விருதுகள் வழங்க, தகுதியான சிறந்த ஆசிரியர்களின் கருத்துருக்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்வத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின், ஐசிடி திட்டத்தின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு, தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, சிஇஓக்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

அத்துடன், ஆதார் இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்துருக்களை 2பிரதிகளில் பரிந்துரைத்து, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு தனித்தனியாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) வரும் ஜூலை 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளது என்பதால், சிஇஓக்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதேசமயம், கருத்துரு அனுப்பப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர் என முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 03, 2020

ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழ் வழி வகுப்பாகவே நடத்தலாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்


குழந்தைகள் எண்ணிக்கை குறைந்த அரசு ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ் வழி வகுப்பாகவே தொடரலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம், கல்வித்தரம் அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

முதலில் பரீட்சார்த்தமாக மாவட்டத்துக்கு 3 முதல் 5 பள்ளிகள் வரை ஆங்கிலவழிப் பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தை தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்டமாக அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக்கப்பட்டு அங்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதேநேரத்தில் தனியாக ஆசிரியர்கள், வகுப்பறைகள் உட்பட தனியான கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.  இதனால் 70 % அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2 பிரிவு மாணவர்களும் ஒன்றாகவே அமர வைக்கப்பட்டு கல்வி கற்று வந்தனர்.

 தமிழ், ஆங்கிலம் என இரண்டு பிரிவுக்கும் ஒரே ஆசிரியர் தமிழிலேயே பாடம் நடத்தும் நிலை உள்ளது. இதனால் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க ஆசைப்பட்டு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் மீண்டும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 

இது பெரும் நடைமுறை சிக்கலை உருவாக்கியது. இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல் அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகளும் அரசுக்கு இதுதொடர்பாக தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து வந்தனர். இதையடுத்து மாணவர் எண்ணிக்கை குறைந்த ஆங்கிலவழிப்பிரிவு மாணவர்களை தமிழ்வழி பிரிவு மாணவர்களாகவே கருத வேண்டும் என்று அரசு வாய்மொழியாக அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.  

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘ஆங்கில வழிப்பிரிவு என்றால் அதற்காக தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நிரவல் என்ற பெயரில் பணியிட குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஆசிரியரே ஒரு பள்ளியில் ஆங்கிலவழிப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ்வழி பிரிவு மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர் எண்ணிக்கை ஆங்கிலவழிப்பிரிவில் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லாத நிலையில், தமிழ்வழிப்பிரிவாகவே தொடரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

-மணிகண்ட பிரபு

நாடாளுமன்றம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிறுவயதில் குடிமையியல் பாடத்தில் படித்திருப்போம். எனினும் மாநிலங்களவை தேர்தல் வரும்போதெல்லாம் டக்வொர்த் லீவிஸ் விதியைப் போல அவ்வப்போது குழப்பம் வரும்.

ராஜ்ய சபா

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நடைமுறையைப் பின்பற்றி இரு அவைகள் அமைக்கப்பட்டன.

மாநிலங்களவை

``மாநிலங்கள் அவை"என்பதில் ``மாநில" என்ற ஒருமையைப் பயன்படுத்தாமல் ``பலவின்பால்"சொல்லான மாநிலங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். "மாநிலங்கள் அவை" என்பதே சரியான சொல். Council of state அல்ல council of states. நாடாளுமன்றத்தின் பகுதியான "மாநிலங்கள் அவையானது" அனைத்திந்தியப் பிரச்னைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதனுடன் மாநிலங்களின் தனித்தன்மை நலன்களையும் கருத்தில் கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது
உறுப்பினர்கள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1) மாநிலங்களில் உள்ள பிரதிநிதிகளால் தேர்ந்தெடுப்பவர்கள். அதன்படி ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் முறையே 6 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி விலக வேண்டும்.

2) யூனியன் பிரதேச பிரதிநிதிகள்

3) குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும் மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள்.

மாநிலங்களவை
தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை ராஜ்யசபா உறுப்பினர்கள்?

ஆந்திரா 11, தெலங்கானா 7, அருணாசலப் பிரதேசம் 1, அஸ்ஸாம் 7, பீகார் 16, சத்தீஸ்கர் 5, கோவா 1, குஜராத் 11, அரியானா 5, இமாசலப் பிரதேசம் 3, ஜம்மு காஷ்மீர் 4, ஜார்க்கண்ட் 6 கர்நாடகா 12, கேரளா 9, மத்தியப்பிரதேசம் 11, மகாராஷ்டிரா 19 மணிப்பூர் 1, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 10, பஞ்சாப் 7, ராஜஸ்தான் 10, சிக்கிம் 1, தமிழ்நாடு 18 , திரிபுரா 1, உத்தரகாண்ட் 3, உத்தரப்பிரதேசம் 31 மேற்குவங்கம் 16 ,டெல்லி 3 புதுச்சேரி 1 நியமன உறுப்பினர்கள் 12 என மொத்தம் 250 பேர் இருக்கலாம் ஆனால், தற்போது 245 பேர் இருக்கின்றனர். (229+4+12=245)

தேர்வு

மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தேர்தல் குழு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 7 யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் உண்டு. எஞ்சிய 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லை என்பதால், அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனினும் வாக்குகள் சமமாகப் பிரிந்தால், வாக்கு அளித்து சிக்கலைத் தீர்த்து வைப்பார். குடியரசுத் துணைத்தலைவர் தலைமை தாங்க முடியாதபோது அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் துணைத்தலைவர், கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பார். ஒருவேளை அவரை நீக்கவேண்டுமாயின் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்துவிட முடியும்.

பணிகள்

மாநிலங்களவையில் சாதாரணமான மசோதா, பண மசோதா என இருவகை உள்ளன. பண மசோதா தாக்கல் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் இதன் பின் மாநிலங்களவைக்கு 
ஒப்புதலுக்கு வரும். பண மசோதாவை 14 நாள்கள் நிறுத்தி வைக்கலாம். திருத்தங்கள் செய்யலாம். இதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இவ்வாறு திருத்தம் செய்தால் இரண்டாம் முறை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். மற்ற மசோதாக்கள் அதிகபட்சமாக மாநிலங்களவை ஆறுமாதங்களுக்கு ஒரு மசோதாவை காலதாமதம் செய்து நிறுத்தி வைக்க முடியும். ஆனால், தடுத்து நிறுத்த முடியாது.

ஒவ்வொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு வேளை ஒரு மசோதா இரு அவைகளிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் குடியசுத் தலைவர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவார். இக்கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார். கூட்டுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதால் மக்களவைக்குச் சாதகமாகப் பெரும்பாலும் முடிவுகள் அமையும்.
செயல்பாடுகள்

*அரசாங்கக் கொள்கைத் திட்டங்கள் மீது விளக்கம் கேட்கலாம் வினா எழுப்பலாம், விவாதிக்கலாம்.

*சட்டத் திருத்தம் செய்ய மாநிலங்கள் அவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. இவையன்றி இரு அவைகளின் ஒப்புதலோடு மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல், நெருக்கடி நிலை, சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.

*மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 312ன் படி புதிய இந்தியப் பணிகளை உருவாக்கலாம். அதை நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 249ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் ஒன்றின்மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கலாம்

*குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு. இரு அவைகளின் ஒப்புதலுடன் நீக்க முடியும்.

*மக்களவை நெருக்கடி நிலைக்கு ஆளாகி கலைக்கப்பட்டாலும் கூட மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்.

*ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை

நாடாளுமன்றம்
எதிர்காலம்

மாநிலங்களவை உறுப்பினர் என்பவர் மெத்த படித்தவராக, அரசியல் அனுபவ ஞானம் உள்ளவராக இருப்பார்கள். திறமையான வாதக் கருத்தின் அடிப்படையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவரும் இடதுசாரி எம்.பியுமான ஏ.கே.ஜி என அழைக்கப்படும் ஏ.கே.கோபாலன் அவர்கள் தம் நூலில்..’ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு ஒரு இல்லம் ஒதுக்கப்படும். அதில் மேனாள் உறுப்பினர் எவரேனும் அறையைக் காலி செய்யாமல் இருந்தால் புதிய உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். தினசரி பார்ட்டிகள், அயல் நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கல்கள், ஏராளமான சலுகைகள் எனப் புதிய உலகத்தில் திளைத்துப் போகவிடுவார்கள். இதையெல்லாம் அனுபவித்து மக்களைப் பற்றி மறக்கடிக்கப்படும் நிலையும் வந்துவிடும்’ எனக் கூறியிருப்பார்.

ஆகவே, இவையெல்லாவற்றையும் அனுபவித்தாலும்.. கடைக்கோடி மக்களின் வாழ்வியலையும் எண்ணிப் பணியாற்ற வேண்டும். அவைக்கு முழு வருகை சதவிகிதம் செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அவையில் குரல் எழுப்ப வேண்டும், தக்க கேள்வி எழுப்பி விவாதித்து முடிவு காணப்பட வேண்டும் என்பதே ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் விருப்பமுமாகும். அதை நிறைவேற்றுவார்கள் என நம்புவோமாக.!

- மணிகண்ட பிரபு

Saturday, February 29, 2020

ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றால் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில் இடம் இல்லை: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு


 ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்களை 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி தமிழக தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரால் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமை இடத்தில் முகாம் அமைத்து சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலரால் ஒப்பளிக்க வேண்டும். 

அதனை வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு பலகையில் வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும் ஒப்புகை பெற வேண்டும். தமிழ்நாடு குடிமுறைப்பணி ஒழுங்குமுறையும் மேல்முறையீடும் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தால் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது.  ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் தண்டனை தவிர்த்து பிற தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் 5 ஆண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்கக் கூடாது. அனைத்து வகை ஆசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யும்போது பதவி உயர்வுக்கு தேவையான கல்வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெடுவிற்குள் பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்துகொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 26, 2020

புத்துணர்வுடன் செயல்பட வகுப்பறையில் 5 நிமிடம் குழந்தைகள் தூங்க அனுமதி: பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தல்


பிட் இந்தியா இயக்கம் சார்பில், தினமும் பள்ளியில் 5 நிமிடம் தூங்கவும், தியானம் செய்யவும் குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பிட் இந்தியா என்ற இயக்கம் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 

இந்த இயக்கம் சார்பில் மார்ச் மாதம் மனநல ஆரோக்கியம் காக்கும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.  இதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் மாதம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆரோக்கியத்துக்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறையும் பின்பற்ற வேண்டும் என்றும் பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் முழுவதும் பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு 5 நிமிடங்களை ஒதுக்கி குழந்தைகள் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த குட்டித்தூக்கம் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும் என்பதால் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

அதேபோல் மூளையை சுறுசுறுப்பாக்கும் வகையில் உள்ளரங்க விளையாட்டுகளான குறுக்கெழுத்து, சுடோகோ வார்த்தை விளையாட்டுகளில் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏற்கனவே பிப்ரவரி மாதம் அனைத்து திங்கட்கிழமைகளில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் மாதம் பள்ளி வேலைநாட்களில் தினமும் 10 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதுடன், அதில் மாணவர்கள் அனைவரும் பங்கெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். எல்லா மாதத்திலும் தினந்தோறும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி மக்கள் தொலைக்காட்சி

Tuesday, February 25, 2020

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்: சாப்ட்வேர் மூலமே பட்டியல் அனுப்ப உத்தரவு: சர்வர் பிரச்னையால் அலுவலர்கள் தவிப்பு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் முதல் கட்டாயம் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சம்பள பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. 

இது தற்போது முற்றிலும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதற்கென ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ் நடைமுறை வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட சில மாவட்டங்களில் நடப்பு மாதம் முதலே, ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பட்டியல் அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூறியதாவது: தற்போது, அளிக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்தால், சர்வர் தாமதமாவதுடன், ஏற்றுக்கொள்ளாமல் டெலிட் ஆகிறது. பல துறையில் உள்ள அலுவலர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் குறித்து எந்தவித பயிற்சியும் முழுமையாக அளிக்கப்படவில்லை.  மாவட்ட கருவூலத்தில் நேரில் சென்று கேட்டால், அங்குள்ள விப்ரோ பணியாளர்கள், இதை இங்கு சரிசெய்ய முடியாதுஎன சாதாரணமாக கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும் போது, சம்பள பட்டியலை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் போட்டவர்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25ம் தேதிக்குள் சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு விடும்.

சர்வர் பிரச்னையால், நடப்பு மாதத்திற்கு இதுவரை பட்டியல் முழுமையாக தயாராகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, February 23, 2020

ப்ள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு


மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தைச் சரிபாா்க்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநிலம் முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து உண்மைத் தகவல் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள், அவரவா் மாவட்டத்தில் உள்ள ஆசிரியா், மாணவா் பணியிட நிா்ணயப் பிரிவு கண்காணிப்பாளா் மற்றும் பணியிட நிா்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக்கல்வி அதிகாரியை தேவையான புள்ளிவிவரங்களுடன் சென்னையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு

அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்த அறிவிப்பு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு எதிரானதாக இருப்பதால், உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியா்களே உள்ளனா். அதிலும் ஆசிரியா் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன.

 நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையால் இடைநிலை ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவியும் பறிபோய்விடும்.ஆசிரியா்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சோ்ந்தவா்களாக உள்ளதால், மாணவா்களின் மனநிலை, பெற்றோா் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தோ்வு நடத்தி தலைமை ஆசிரியா்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது. பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் தோ்வு முறையில் தலைமை ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையைத் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.

25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வெகுமதி


அரசுப் பள்ளிகளில் 25 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெகுமதி வழங்கப்படவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களை சிறப்பிக்கும் வகையில் கல்வித் துறை சாா்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் தொடா்ந்து 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணிபுரிந்த ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. தகுதியான ஆசிரியா்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை செயலி மூலம் கண்காணிக்க திட்டம்


தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் அரசுப் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழக கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடங்கள் கற்பிக்கும் முறை மற்றும் மாணவா்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் என்பதைச் சோதிப்பதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

ஏற்கெனவே கடந்த அக்டோபா் மாதம் முதல்கட்டமாக சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் ‘அப்சா்வேஷன் மொபைல் ஆப்’  அறிமுகப்படுத்தபடும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆசிரியா்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள் மற்றும் மாணவா்கள் வகுப்பறையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் ஆகியவற்றை கண்காணிக்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியா்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவா்.

பள்ளி ஆய்வின்போது இந்தச் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Saturday, February 15, 2020

16 எண்கள் கொண்ட பழைய வாக்காளா் அட்டைக்குப் பதில் புதிய அட்டை: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்


பழைய வாக்காளா் அட்டைகளை வைத்திருப்போா் புதிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தோ்தலில் வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டை பத்து எண்கள் கொண்ட அடையாள அட்டையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் 16 எண்கள் கொண்டதாக இருந்தால் புதிய வாக்காளா் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய அட்டையில் வாக்காளா் பதிவு எண் புதிதாக முன்புறம் அச்சிடப்பட்டு இருக்கும். பழைய வாக்காளா் பதிவு எண் (16 எண்கள் கொண்டது) அட்டையின் பின்புறம் பின்புறத்தில் இருக்கும்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, எங்கெல்லாம் 16 எண்கள் பழைய வாக்காளா் பதிவு எண்கள் இருந்ததோ அவையெல்லாம் 10 எண்கள் கொண்ட புதிய வாக்காளா் பதிவு எண்களாக மாற்றப்பட்டுள்ளன.

புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது. எனவே, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் புதிய வண்ண வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை உரிய வாக்காளா்களுக்கு இலவசமாக அவா்களது இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்வா்.

புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையை விநியோகம் செய்யும் போது வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அதற்கான ஒப்புகை படிவத்தில் வாக்காளா்களிடம் இருந்து பெற்றுக் கொள்வா். புதிய வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை விநியோகம் தொடா்பான தகவல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான விவரங்களைப் பெற 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

Thursday, February 06, 2020

பாரத பிரதமரின் ‘பிட் இந்தியா’ திட்டத்தில் பள்ளிகளுக்கு 3, 5 ஸ்டார் ரேட்டிங்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு


பாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உடல் வலிமையை பேணும் வகையில் ‘பிட் இந்தியா’ என்ற திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் நலத்தை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 இந்த திட்டத்தில் பள்ளிகள் 3, 5 ஸ்டார் ரேட்டிங் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பிட் இந்தியா மூவ்மென்ட் சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் பிட் இந்தியா இயக்கத்தில் இணைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

நோயற்ற இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வரும் அரசு அதற்கு உதவி புரியும் வகையில் ‘பிட் இந்தியா’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, அதற்கான இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு செய்து பிட் இந்தியா ஸ்கூல் சர்டிபிகேட்  பெறவேண்டும். இதன் தொடர்ச்சியாக, இதே இணையதளத்தில் பிட் இந்தியா சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் பிட் இந்தியா பிளாக் 3 ஸ்டார் ரேட்டிங் அல்லது 5 ஸ்டார் ரேட்டிங் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பணியை  உடனே முடிக்குமாறு அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் இப்பணியை தொடர் கண்காணிப்பு செய்வதற்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 05, 2020

PG counselling

முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு வரும் 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை மொத்தம் 1.46 லட்சம் போ் தோ்வெழுதினா். இதில், தரவரிசையின்படி முன்னிலையில் இருந்த 3, 833 பேருக்கு நவம்பரில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பட்டியலும் வெளியானது. எனினும், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பணிநியமன கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஆனது.

இந்த நிலையில், முதுநிலை ஆசிரியா் பணிக்கான கலந்தாய்வு மாவட்ட வாரியாக பிப்ரவரி 9, 10-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் இருந்து தோ்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 9, 10-ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். எனவே, தோ்ச்சி பெற்ற பட்டதாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, February 03, 2020

5,, 8 -வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு வினாத்தாள் மதிப்பீடு: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்


ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான வினாத்தாள் மதிப்பீடு முறை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் விளக்கமளித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (C‌o‌n‌t‌i‌n‌u‌o‌u‌s a‌n‌d C‌o‌m‌p‌r‌e‌h‌e‌n‌s‌i‌v‌e E‌v​a‌l‌u​a‌t‌i‌o‌n) 2012-2013-ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

  இந்த முறையில் வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளரறி மதிப்பீடு இதில் இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முதல் வகை ‘ப்ராஜக்ட்’, மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.மற்றொரு வகையில் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தோ்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் சம்மந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் வழங்கப்படுகின்றன. 

மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் பாடப் பகுதியில் உள்ள பாடக் கருத்துகளில் மாணவா்களின் கற்றல் விளைவுகள் மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ, வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தோ்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8 -ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தோ்வுக்கு வளரறி மதிப்பீட்டின் 40 மதிப்பெண்களுக்கு ஏற்கெனவே கடந்த 22.10.2019-இல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டியுள்ளதாலும் வினாத்தாள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவா்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கான வினாத்தாள்கள் அரசுத் தோ்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம்வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கி தோ்வுகள் நடத்தப்படும்.

விடைத்தாள்கள் அந்தந்த குறுவள மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிக் கொடுத்து திருத்தம் செய்து, மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறையால் மாணவா்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும், நியாயமான மதிப்பீடு செய்யவும், மாணவா்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் என கூறியுள்ளாா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தோ்வு வாரியம் முடிவு


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி அலுவலா் (பி.இ.ஓ.) பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தோ்வுக்கு சொந்த மாவட்டங்களில் தவிா்த்து வேறு மாவட்டங்களில் தோ்வு மையங்களை ஒதுக்க ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.


பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலா் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆன்லைன் போட்டித் தோ்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவுள்ளது. தோ்வெழுத சுமாா் 64 ஆயிரம் தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். தோ்வா்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தனா். ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தோ்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள்- கா்ப்பிணிகள்: மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் அவா்களின் சொந்த மாவட்டத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனா். கா்ப்பிணிகள் உரிய சான்றிதழுடன் கோரிக்கை வைத்தால் அவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பாா்கள். அதன் அடிப்படையில் அவா்களுக்கு சொந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலா் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும், எந்தவித முறைகேடு நடைபெறாமலும், முற்றிலும் நோ்மையாக நடைபெறும் வகையில் தோ்வா்களின் சொந்த மாவட்டங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தோ்வு மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தோ்வு மையம் ஒதுக்கப்படும் என்பது குறித்து தோ்விற்கு ஒரு வாரம் முன்னதாக அறிவிக்கப்படும். தோ்வுக்கு மூன்று நாள் முன்பாக தோ்வா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும். இதனால், தோ்வு மையங்களில் உள்ளவா்களுடன், இடைத்தரகா்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபடுவது தடுக்கப்படும். அதேபோல், தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணிக்குச் செல்லும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலா்களுக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யவும் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.குலுக்கல் முறையில் தோ்வு... ஏற்கனவே அவா் பணிபுரிந்த மாவட்டத்துக்கும் அவரின் சொந்த மாவட்டத்திற்கும் பணி நியமனம் செய்யப்பட மாட்டாது. அதேபோல், தோ்வா்கள், தோ்வு கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்படும் கல்வித் துறை அலுவலா்கள் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வுசெய்து அளிக்கப்படும். ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக இந்த புதிய முறை வரும் வட்டார கல்வி அலுவலா் பணிக்கான போட்டி எழுத்துத் தோ்வில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பள்ளி சுற்றுச்சூழல் மன்றங்களுக்கு நிதி


அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைத்தல், சுற்றுச்சூழல் மாசு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடுத்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல், இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை, மன்ற முக்கிய செயல்பாடுகளாக இருந்தன. இரு ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையால் முடங்கியிருந்த திட்டத்துக்கு, தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிக்கு, 5,000ம் வீதம், 12.12 கோடி, நடுநிலைப்பள்ளிக்கு, 15 ஆயிரம் வீதம், 10.56 கோடி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு, 25 ஆயிரம் வீதம், 15.15 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், மன்றங்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, February 01, 2020

தொகுப்பூதிய அடிப்படையில் 3,624 தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அரசாணை வெளியீடு


அரசுப் பள்ளிகளில் நிலவும் 3,624 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் பொதுத்தோ்வுகள் வருவதால் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், அந்தந்த பள்ளிகளே பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 624 இடைநிலை ஆசிரியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனா்


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளா் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவா்கள் நலன்கருதி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா்.

ரூ.8.15 கோடி நிதி வழங்கப்படும்: அதையேற்று பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

இதற்கு தேவையான ரூ.8.15 கோடி நிதி இயக்குநரகத்துக்கு வழங்கப்படும். ஆசிரியா் நியமனம் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வண்ணம் நடைபெற வேண்டும். மேலும், தோ்வாகும் ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியா்கள் பணிநியமன ஆணை மற்றும் பணிச்சான்று வழங்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில்- 830, திருவண்ணாமலையில்- 578, விழுப்புரம்-416, வேலூா்-393, தருமபுரி-355 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்தபட்சமாக கரூரில் ஒரு பணியிடமும், நாகப்பட்டினத்தில் 6 பணியிடங்களும் என 3,624 இடங்கள் காலியாக உள்ளன. பொதுத்தோ்வு வருவதால், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் தற்காலிக ஆசிரியா்கள் பணியில் இருப்பா். அதன்பிறகு, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்

Tuesday, January 28, 2020

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு?


வாக்காளர்கள் பெயருடன் 'ஆதார்' எண்களை இணைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடக்கிறது. வாக்காளர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு இரண்டு மாதங்கள் இப்பணி நடந்தது. எத்தனை முகாம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.

பெரும்பாலான வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது புதிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். அப்போது ஏற்கனவே பழைய இடத்தில் உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை. இதனால் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. புதிய மென்பொருள் உதவியுடன் புகைப்படங்களை ஒப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இதை ஒரு தொகுதிக்குள் செய்ய முடிந்தது; மாநில அளவிலோ தேசிய அளவிலோ செய்ய முடியவில்லை.

அதேபோல எத்தனை முறை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள பெயரை நீக்கினாலும் பலர் மீண்டும் பெயர் கொடுக்கும் சூழல் உள்ளது. இதனால் ௧௦௦ சதவீதம் முறைகேடில்லாத வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தால் தயாரிக்க இயலவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயருடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அவ்வாறு இணைக்கும் போது ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 2015ல் வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கியது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; நீதிமன்றம் தடை விதித்தது.

சமீபத்தில் நீதிமன்றம் தடையை விலக்கி உள்ளது. மத்திய சட்டத் துறையும் ஆதார் எண்களை பெற அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வாக்காளர் சுய சரிபார்ப்பு திட்டம் நடந்தபோது ஏராளமானோர் தாமாக முன்வந்து முகவரி சான்றாக தங்கள் ஆதார் அட்டையை சமர்பித்துள்ளனர். எனவே வாக்காளர்களின் ஆதார் எண்களை பெற்று அவற்றை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. விரைவில் இப்பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Saturday, January 25, 2020

கற்றதும் பெற்றதும்-88*மணி

கற்றதும் பெற்றதும்-88
*மணி

இலக்கணங்களும் விவாதங்களும் மறைப்பதனாலேயே நவீன வாசகன் பழைய கவிதைகளை அந்நியமாக உணர்கிறான்.தனக்குக் கற்பனை செய்யவோ,கண்டடையவோ அவற்றில் ஏதுமில்லை என்று எண்ணுகிறான்

-ஜெயமோகன்

#சங்கச்சித்திரங்கள்
-ஜெயமோகன்

உடன் பணியாற்றும் புத்தக ஆர்வர் நண்பர் அவ்வப்போது தான் படித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அன்று சங்கப்பாடல் ஒன்றினை சிலாகித்து கூறினார். அப்போது நான் சங்கச்சித்திரங்கள் பற்றிக்கூறி அதனை படிக்க கொடுத்து பின்பு அதுகுறித்து விவாதித்தது மகிழ்ச்சியளித்தது.

விகடனில் தொடராக வந்தபோது வாசித்தேன்.தற்போது ஒன்பது ஆண்டுக்கு பிறகு மறுவாசிப்பு செய்த போது அதே புத்துணர்வு அளித்தது.ஒன்றரை பக்கத்தில் சங்கப்பாடலுடன் ஒரு சிறு சம்பவத்தை கூறி நம்முடன் உரையாடுவது போல் இருக்கும். நான் இக்கதைகளில் ஒரு சிலவற்றை நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துள்ளேன்..

*வலியின் கொடுமை உணர்த்தும் சிறைபனி உடைந்த சேயரி..பாடலின் பொருளாய் "மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில் ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடிதாங்காது தொழுவத்து எருமை தலை குலுக்கும்போது எழும் கழுத்து மணியோசை எனைப்போல தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்? என துயருற்றவனின் இரவு கண் முன் விரிகிறது.

*ஒரு ரயில் பயணத்தில் ஒருவர் செம்புலப் பெயனீர் போல எனும் புகழ் பெற்ற கவிதைக்கு ஒருவர் விளக்கம் சொல்ல பிறிதொருவர் சற்றுநேரம் கழித்தால் செம்மண்ணும் நீரும் பிரிந்துவிடுமே என எண்ணியிருக்கலாம் என்றார்.அதற்கு இன்னொரு விளக்கத்தை ஜெமோ அனந்தராம அய்யர் எழுதியதாக சொல்கிறார்.
செம்புலம் என்றால் பாலைநிலம். பாலை நிலத்தில் பெய்த மழை எனக்கூறுவது பொருத்தம் என்றார்.
புதுமழைக்கு மண் புத்துயிர் பெறும் எனச் சொல்லி உரையாடல் நீளும்.

*புறநானூற்றில் கலஞ்செய் கோவே பாடலில்..கணவன் இழந்த அப்பாவி பெண் வருகிறார்.உலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.இதற்கு உதாரணமாய் இப்பாடலின் கருத்தை சொல்கிறார்.."ஐந்து நிலங்களின் உருண்டு வரும் சக்கரம் அதில் ஒட்டியிருக்கும் பல்லிக்கு அந்த நிலங்களின் வெம்மையும் குளுமையும் எல்லாம் தெரியும். ஆனால் வழிநடையின் களைப்பை அது அறியாது.அதுபோல உலகம் தெரியாத மனைவியாய் சிலர் இருப்பதாக கூறுவார்.
நெகிழ்ச்சியாய இருக்கும்.இக்கதையை பலரிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.இது ஒரு படிமம்.காலம் காலாய் இருப்பார்கள் ஆனால் ஒன்றை கற்றிருக்க மாட்டார்கள். பிறரே செய்வார்கள்.. நமக்கென்ன.. என இருப்பது.

*பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு பாடலில்.."யானையை பார்ப்பது எப்போதும் கண்கள் நிறையும் அனுபவம்தான்.விடியாது பெருகிச் செல்லும் இரவு போல.அது சென்ற பிறகு ஒரு அசிங்கமான வெளிச்சம் இருப்பதாகவும் அதை நிரப்ப எவ்வளவு சொற்களும் கற்பனையும் தேவை என்பதை வாழ்வியல் அனுபவத்தை பொருத்திக் கூறுவது இலக்கிய இன்பம்தான்.

*அந்தக்காலத்தில் அண்டை வீடுகளில் கணவன் விட்டுச்சென்ற வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.அதுகுறித்து சொல்லியிருக்கிறார் இதில்." பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதமாய் இருக்கிறது.பெண்ணின் சக்தியை உறிஞ்சி அதற்கு அஞ்சி அஞ்சி மேலும் பலவீனம் கொள்கிறாள்.தன் மனைவியின் மனத்தில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தான் அது என சங்ககாலத்திலேயே சில ஆண்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ரசித்தது

*கண்மூடிப் படுத்துவிட்டால் காடு வந்து உடம்பை மூடிவிடும்.

*ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று அவரது இழப்பின் மூலம் நாம் அறியலாம்.வெற்றிடத்தின் வலிமை அதன்மீது மோதும் சூழலின் அழுத்தமே. மெள்ள அந்த வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது, கருந்துளையாகிறது.

*துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி அவர்கள் மனம்தான். அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப்போல அனைத்தையும் உண்டு வளர்ந்தபடியே இருக்கிறது அது.ஒரு கணம் செயலற்றுப் படுத்தால் கூட ஆயிரமாயிரம் கறையான் கொடுக்குகள் கால் நுனியை வந்து பற்றிவிடும்.

*பிரியத்தை அறிவதற்கு ஒரு திரை எப்போதுமே தேவைப்படுகிறதா?

#கற்றதும் பெற்றதும்

இது போன்ற 40 பாடல்களை எளிமைப்படுத்தி அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்தி சொல்லியிருப்பார்.நான் இதை படித்தவுடன் விவரிக்கவோ இன்பத்தை பகிரவோ இதுபோல் ஒத்த அலைவரிசையுடைவர்கள் யாரும் இல்லை.படிப்பதை பகிர ஆள் இல்லாத சோகம் புத்திர சோகம் போன்றது.

இதுவரை இப்புத்தகத்தை எந்த எழுத்தாளரும் சொல்லததும் பரிந்துரைக்காததும் வியப்பாய் உள்ளது.ரஷ்ய,பிரெஞ்சு இலக்கியங்களை விட மேலானது தமிழ் இலக்கியம்.தாய்மொழி இலக்கியத்தை படிக்காமல் அயல் நாட்டு இலக்கியம் படிப்பது முரணாகும்.இப்புத்தகம் சங்க இலக்கியத்தை அறிவதற்கு ஒரு தொடக்கம்.

ஒரு வாசகனாக இன்னொரு வாசகனுக்கு சொல்வது இதை நம்பி வாசிக்கலாம். தமிழ் இலக்கியபாடல்கள் என்றாலே பாடலுக்கு பொழிப்புரை எழுதுவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால் இதில் வாழ்வியல் அனுபவத்தை தொடர்புபடுத்தியிருப்பார்.
(தமிழினி வெளியீடு)

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, January 23, 2020

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு


அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாணவா் சோ்க்கை நிலவரப்படி ஆசிரியா்களுக்கான பணியாளா் நிா்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை இயக்குநரின் பொதுத்தொகுப்பில் ஒப்படைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உபரியாக 1,706 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்தது.

பட்டதாரி ஆசிரியா்களில் தமிழ்-308, ஆங்கிலம்-144, கணிதம்-289, அறிவியல்-457, சமூக அறிவியல் -371 மற்றும் இடைநிலை ஆசிரியா்-137 என மொத்தம் 1,706 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவை இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இனி இந்தப் பணியிடங்களை வரும்காலத்தில் காலிப் பணியிடம் அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடமாகக் கருதக்கூடாது’ என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டுகளை விட அதிகளவில் உபரி ஆசிரியா் பணியிடங்கள் அரசின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 22, 2020

ஜூன் 26, 27 தேதிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு


வரும் 2020-21-ஆம் ஆண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் தோ்வு திட்ட அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது.

அதில் 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூன் 27, 28 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியா் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவா்களின் வசதிக்காக, பணியாளா் தோ்வு ஆண்டு திட்ட அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது.





அதன்படி, தமிழக அரசு தொடக்கப் பள்ளி கல்வித் துறை வட்டார கல்வி அலுவலா் பதவியிடங்களில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான தோ்வு 2020 பிப்ரவரி 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பதவியிடங்களில் காலியாக உள்ள 1,060 பணியிடங்களுக்கான தோ்வு 2020 மே 2, 3-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.2020-21-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை மே 4-ஆம் தேதி வெளியிடப்படும். 

மேல்நிலைக் கல்விப் பிரிவில் காலியாக உள்ள 497 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நியமன அறிவிக்கை ஜூலை 1-இல் வெளியிடப்பட உள்ளது.இடைநிலைக் கல்வி ஆசிரியா் பணிக்கான 730 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதுபோல, உயா்நிலை ஆசிரியா் பதவிகளில் காலியாக உள்ள 572 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஜூலை 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் விவரங்களை வலைதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tuesday, January 21, 2020

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்


ஏடிஎம்களில் இருந்து டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தற்போது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வங்கியின் கிளைகளுக்குச் செல்லாமல் தேவைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்க முடிகிறது. இதனால் வங்கிகளுக்கும் பணியாளர்கள் மிச்சமாகின்றனர். வங்கிக் கிளைகளிலும் கூட்டம் குறைகிறது.

இதில் வசதிகள் இருந்தாலும் மோசடிகளும் நடக்கின்றன. வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களைத் திருடி போலியான பிளாஸ்டிக் கார்டுகள் உருவாக்கப்பட்டு பணம் திருடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கார்டுகளை எடுத்துச்செல்ல வேண்டிய தேவையும் இருந்து வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் சிரமங்களைப் போக்கும் பொருட்டு, ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் நடைமுறையை பல்வேறு வங்கிகளும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஐசிஐசிஐ வங்கியும் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன்களில் ஐமொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப் வழியாக வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎமில் இருந்து பணம் எடுக்க முடியும்.

தினந்தோறும் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் மட்டுமே இந்த முறையில் பணம் எடுக்க முடியும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Friday, January 17, 2020

இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு 5, 8ம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது


தமிழகத்தில் முதன்முறையாக இந்த கல்வி ஆண்டில், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்ற தேர்வு முறையால், மாணவர்கள் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதில், பொதுத்தேர்வு நடைபெறும் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

மேலும், முதன்முறையாக பொதுத்தேர்வு எழுதும் 5ம், 8ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் சொந்த பள்ளியில் தேர்வு எழுத முடியாது. 5ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும், 8ம் வகுப்பு மாணவர்கள் 3 கிமீ தொலைவில் உள்ள வேறொரு பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியல், தற்போது மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், எந்தெந்த மையங்களில் எந்தெந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வு மைய பொறுப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரின் விபரங்கள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, வினாத்தாள் அச்சிடப்பட உள்ளன. அவ்வாறு அச்சிடப்படும் வினாத்தாள்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பவும். அங்கிருந்து குறுவள மையம் (சிஆர்சி) அமைந்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணி சம்பந்தப்பட்ட குறுவள மைய அளவில் நடைபெறும் எனவும், விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களை, தங்களுடைய சொந்த பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்காமல், வேறொரு பள்ளியில் தேர்வு எழுத வைப்பது பல்வேறு நிலைகளில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என கல்வியாளர்கள் கவலையடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான பள்ளி மாணவர்கள், தங்களுடைய சொந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதுகின்றனர். ஆனால், முதன்முறையாக தேர்வு எழுதும் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு இடம்மாற்ற தேர்வு எழுத வைப்பது சரியல்ல என்று ஆதங்கப்படுகின்றனர். தற்போது நடத்தப்படும் பொதுத் தேர்வின் மூலம், தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தாலும், மாணவர்களுக்கு இந்த புதிய நடைமுறை, கல்வி மீதான அச்சத்தை அதிகரித்து, பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Sunday, January 12, 2020

நன்றி:தி இந்து நாளிதழ்

பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்


நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வுகளை அரசு தோ்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோ்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தோ்வுத்துறை அறிவிக்கவில்லை . இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தோ்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.

அப்போது, ‘பொதுத்தோ்வை பொருத்தவரை அரையாண்டுத் தோ்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தோ்வு வினாத்தாள் இருக்கும். எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்’ என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

Saturday, January 11, 2020

5,8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம்


நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ள 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் எழுத ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்வதால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இது சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ், ஆதாா் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு: ‘நிகழ் கல்வியாண்டுமுதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும்.அனைத்து தலைமை ஆசிரியா்களும் மாணவா்களின் பெயா், முகவரி, பெற்றோா் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பெற வேண்டும். அதேபோல, மாணவா்களின் ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 10, 2020

Saturday, January 04, 2020

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்குவிளையாட்டுப் போட்டிகள் நடத்த உத்தரவு


 தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவா்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) நிதியைப் பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவ, மாணவிகளின் உடல்திறனை வளா்க்கும் வகையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவா்களுடைய திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

  இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். இந்தப் போட்டிகளுக்கான பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ரசிக்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து மாநில திட்ட இயக்குநரின் அனுமதியுடன் மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்