இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 03, 2020

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும்... நடைமுறையும்...!My vikatan

-மணிகண்ட பிரபு

நாடாளுமன்றம்
மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிறுவயதில் குடிமையியல் பாடத்தில் படித்திருப்போம். எனினும் மாநிலங்களவை தேர்தல் வரும்போதெல்லாம் டக்வொர்த் லீவிஸ் விதியைப் போல அவ்வப்போது குழப்பம் வரும்.

ராஜ்ய சபா

1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில் பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நடைமுறையைப் பின்பற்றி இரு அவைகள் அமைக்கப்பட்டன.

மாநிலங்களவை

``மாநிலங்கள் அவை"என்பதில் ``மாநில" என்ற ஒருமையைப் பயன்படுத்தாமல் ``பலவின்பால்"சொல்லான மாநிலங்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். "மாநிலங்கள் அவை" என்பதே சரியான சொல். Council of state அல்ல council of states. நாடாளுமன்றத்தின் பகுதியான "மாநிலங்கள் அவையானது" அனைத்திந்தியப் பிரச்னைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதனுடன் மாநிலங்களின் தனித்தன்மை நலன்களையும் கருத்தில் கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது
உறுப்பினர்கள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1) மாநிலங்களில் உள்ள பிரதிநிதிகளால் தேர்ந்தெடுப்பவர்கள். அதன்படி ஒவ்வொரு மாநிலமும் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும். உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் முறையே 6 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி விலக வேண்டும்.

2) யூனியன் பிரதேச பிரதிநிதிகள்

3) குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும் மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவார்கள்.

மாநிலங்களவை
தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியக் குடிமகனாகவும் 30 வயது முடிந்திருக்கவும் வேண்டும். மத்திய மாநில அரசாங்கத்தின் ஊதியம் பெரும் பதவியில் இருக்கக் கூடாது.

குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை ராஜ்யசபா உறுப்பினர்கள்?

ஆந்திரா 11, தெலங்கானா 7, அருணாசலப் பிரதேசம் 1, அஸ்ஸாம் 7, பீகார் 16, சத்தீஸ்கர் 5, கோவா 1, குஜராத் 11, அரியானா 5, இமாசலப் பிரதேசம் 3, ஜம்மு காஷ்மீர் 4, ஜார்க்கண்ட் 6 கர்நாடகா 12, கேரளா 9, மத்தியப்பிரதேசம் 11, மகாராஷ்டிரா 19 மணிப்பூர் 1, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 10, பஞ்சாப் 7, ராஜஸ்தான் 10, சிக்கிம் 1, தமிழ்நாடு 18 , திரிபுரா 1, உத்தரகாண்ட் 3, உத்தரப்பிரதேசம் 31 மேற்குவங்கம் 16 ,டெல்லி 3 புதுச்சேரி 1 நியமன உறுப்பினர்கள் 12 என மொத்தம் 250 பேர் இருக்கலாம் ஆனால், தற்போது 245 பேர் இருக்கின்றனர். (229+4+12=245)

தேர்வு

மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை தேர்தல் குழு, உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 7 யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டுமே மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் உண்டு. எஞ்சிய 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவர் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லை என்பதால், அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனினும் வாக்குகள் சமமாகப் பிரிந்தால், வாக்கு அளித்து சிக்கலைத் தீர்த்து வைப்பார். குடியரசுத் துணைத்தலைவர் தலைமை தாங்க முடியாதபோது அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் துணைத்தலைவர், கூட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்பார். ஒருவேளை அவரை நீக்கவேண்டுமாயின் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்துவிட முடியும்.

பணிகள்

மாநிலங்களவையில் சாதாரணமான மசோதா, பண மசோதா என இருவகை உள்ளன. பண மசோதா தாக்கல் மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் இதன் பின் மாநிலங்களவைக்கு 
ஒப்புதலுக்கு வரும். பண மசோதாவை 14 நாள்கள் நிறுத்தி வைக்கலாம். திருத்தங்கள் செய்யலாம். இதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இவ்வாறு திருத்தம் செய்தால் இரண்டாம் முறை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். மற்ற மசோதாக்கள் அதிகபட்சமாக மாநிலங்களவை ஆறுமாதங்களுக்கு ஒரு மசோதாவை காலதாமதம் செய்து நிறுத்தி வைக்க முடியும். ஆனால், தடுத்து நிறுத்த முடியாது.

ஒவ்வொரு மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகுதான் அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு வேளை ஒரு மசோதா இரு அவைகளிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் குடியசுத் தலைவர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவார். இக்கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குவார். கூட்டுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதால் மக்களவைக்குச் சாதகமாகப் பெரும்பாலும் முடிவுகள் அமையும்.
செயல்பாடுகள்

*அரசாங்கக் கொள்கைத் திட்டங்கள் மீது விளக்கம் கேட்கலாம் வினா எழுப்பலாம், விவாதிக்கலாம்.

*சட்டத் திருத்தம் செய்ய மாநிலங்கள் அவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. இவையன்றி இரு அவைகளின் ஒப்புதலோடு மட்டுமே துணை ஜனாதிபதி தேர்தல், நெருக்கடி நிலை, சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீக்குதல் போன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.

*மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 312ன் படி புதிய இந்தியப் பணிகளை உருவாக்கலாம். அதை நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு.

*ஷரத்து 249ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் ஒன்றின்மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கலாம்

*குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு. இரு அவைகளின் ஒப்புதலுடன் நீக்க முடியும்.

*மக்களவை நெருக்கடி நிலைக்கு ஆளாகி கலைக்கப்பட்டாலும் கூட மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்.

*ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை

நாடாளுமன்றம்
எதிர்காலம்

மாநிலங்களவை உறுப்பினர் என்பவர் மெத்த படித்தவராக, அரசியல் அனுபவ ஞானம் உள்ளவராக இருப்பார்கள். திறமையான வாதக் கருத்தின் அடிப்படையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவரும் இடதுசாரி எம்.பியுமான ஏ.கே.ஜி என அழைக்கப்படும் ஏ.கே.கோபாலன் அவர்கள் தம் நூலில்..’ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு ஒரு இல்லம் ஒதுக்கப்படும். அதில் மேனாள் உறுப்பினர் எவரேனும் அறையைக் காலி செய்யாமல் இருந்தால் புதிய உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். தினசரி பார்ட்டிகள், அயல் நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கல்கள், ஏராளமான சலுகைகள் எனப் புதிய உலகத்தில் திளைத்துப் போகவிடுவார்கள். இதையெல்லாம் அனுபவித்து மக்களைப் பற்றி மறக்கடிக்கப்படும் நிலையும் வந்துவிடும்’ எனக் கூறியிருப்பார்.

ஆகவே, இவையெல்லாவற்றையும் அனுபவித்தாலும்.. கடைக்கோடி மக்களின் வாழ்வியலையும் எண்ணிப் பணியாற்ற வேண்டும். அவைக்கு முழு வருகை சதவிகிதம் செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அவையில் குரல் எழுப்ப வேண்டும், தக்க கேள்வி எழுப்பி விவாதித்து முடிவு காணப்பட வேண்டும் என்பதே ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் விருப்பமுமாகும். அதை நிறைவேற்றுவார்கள் என நம்புவோமாக.!

- மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment