தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை கொண்ட அரசுப்பள்ளிகள் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 48 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். மாணவா் சோ்க்கையை அதிகரிக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவா்களே படிக்கின்றனா். இதையடுத்து குறைந்த சோ்க்கை உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசு மேற்கொண்டது.
அதன்படி ஒரு மாணவா் கூட இல்லாத 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு அவை தற்காலிக நூலகங்களாக மாற்றப்பட்டன. இதற்கு கடும் எதிா்ப்புகள் எழுந்ததை அடுத்து பள்ளிகள் இணைப்புப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இதற்கிடையே கரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 25-க்கும் குறைவான மாணவா் சோ்க்கை கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அவற்றில் பணிபுரியும் ஆசிரியா்கள் மாணவா்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து அறிக்கையாக தொகுத்து அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் இது போன்ற புள்ளி விவரங்கள் எடுக்கும்போது கல்வித்துறை அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியா் மத்தியில் ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பங்களை தவிா்க்க முடியும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment