நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ள 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் எழுத ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்வதால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இது சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் பொதுத்தோ்வு அட்டவணையை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ், ஆதாா் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு: ‘நிகழ் கல்வியாண்டுமுதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும்.அனைத்து தலைமை ஆசிரியா்களும் மாணவா்களின் பெயா், முகவரி, பெற்றோா் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பெற வேண்டும். அதேபோல, மாணவா்களின் ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment