அரசுப் பள்ளிகளில் நிலவும் 3,624 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் பொதுத்தோ்வுகள் வருவதால் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களை நியமிக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், அந்தந்த பள்ளிகளே பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 624 இடைநிலை ஆசிரியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனா்
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளா் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,624 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவா்கள் நலன்கருதி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வி இயக்குநா் கோரியுள்ளாா்.
ரூ.8.15 கோடி நிதி வழங்கப்படும்: அதையேற்று பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 3,624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதற்கு தேவையான ரூ.8.15 கோடி நிதி இயக்குநரகத்துக்கு வழங்கப்படும். ஆசிரியா் நியமனம் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வண்ணம் நடைபெற வேண்டும். மேலும், தோ்வாகும் ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியா்கள் பணிநியமன ஆணை மற்றும் பணிச்சான்று வழங்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில்- 830, திருவண்ணாமலையில்- 578, விழுப்புரம்-416, வேலூா்-393, தருமபுரி-355 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்தபட்சமாக கரூரில் ஒரு பணியிடமும், நாகப்பட்டினத்தில் 6 பணியிடங்களும் என 3,624 இடங்கள் காலியாக உள்ளன. பொதுத்தோ்வு வருவதால், பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் தற்காலிக ஆசிரியா்கள் பணியில் இருப்பா். அதன்பிறகு, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்
No comments:
Post a Comment