தமிழக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஐசிடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018 மற்றும் 2019க்கான தேசிய விருதுகள் வழங்க, தகுதியான சிறந்த ஆசிரியர்களின் கருத்துருக்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்வத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின், ஐசிடி திட்டத்தின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு, தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, சிஇஓக்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
அத்துடன், ஆதார் இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்துருக்களை 2பிரதிகளில் பரிந்துரைத்து, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு தனித்தனியாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) வரும் ஜூலை 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளது என்பதால், சிஇஓக்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேசமயம், கருத்துரு அனுப்பப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர் என முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment