பிட் இந்தியா இயக்கம் சார்பில், தினமும் பள்ளியில் 5 நிமிடம் தூங்கவும், தியானம் செய்யவும் குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் பிட் இந்தியா என்ற இயக்கம் கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் சார்பில் மார்ச் மாதம் மனநல ஆரோக்கியம் காக்கும் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் மாதம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆரோக்கியத்துக்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறையும் பின்பற்ற வேண்டும் என்றும் பிட் இந்தியா இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மார்ச் மாதம் முழுவதும் பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு 5 நிமிடங்களை ஒதுக்கி குழந்தைகள் தூங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த குட்டித்தூக்கம் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும் என்பதால் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் மூளையை சுறுசுறுப்பாக்கும் வகையில் உள்ளரங்க விளையாட்டுகளான குறுக்கெழுத்து, சுடோகோ வார்த்தை விளையாட்டுகளில் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏற்கனவே பிப்ரவரி மாதம் அனைத்து திங்கட்கிழமைகளில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் மாதம் பள்ளி வேலைநாட்களில் தினமும் 10 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதுடன், அதில் மாணவர்கள் அனைவரும் பங்கெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் இலக்கியம் சார்ந்த விஷயங்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். எல்லா மாதத்திலும் தினந்தோறும் ஒரு வகுப்பு உடற்பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment