ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான வினாத்தாள் மதிப்பீடு முறை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்தியன் விளக்கமளித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தொடா் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation) 2012-2013-ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முறையில் வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளரறி மதிப்பீடு இதில் இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. முதல் வகை ‘ப்ராஜக்ட்’, மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.மற்றொரு வகையில் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தோ்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் சம்மந்தப்பட்ட பள்ளியின் பாட ஆசிரியா்களால் வழங்கப்படுகின்றன.
மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் பாடப் பகுதியில் உள்ள பாடக் கருத்துகளில் மாணவா்களின் கற்றல் விளைவுகள் மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ, வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தோ்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8 -ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தோ்வுக்கு வளரறி மதிப்பீட்டின் 40 மதிப்பெண்களுக்கு ஏற்கெனவே கடந்த 22.10.2019-இல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியா்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும், தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டியுள்ளதாலும் வினாத்தாள்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவா்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கான வினாத்தாள்கள் அரசுத் தோ்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம்வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கி தோ்வுகள் நடத்தப்படும்.
விடைத்தாள்கள் அந்தந்த குறுவள மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிக் கொடுத்து திருத்தம் செய்து, மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறையால் மாணவா்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும், நியாயமான மதிப்பீடு செய்யவும், மாணவா்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் என கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment