இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 25, 2020

கற்றதும் பெற்றதும்-88*மணி

கற்றதும் பெற்றதும்-88
*மணி

இலக்கணங்களும் விவாதங்களும் மறைப்பதனாலேயே நவீன வாசகன் பழைய கவிதைகளை அந்நியமாக உணர்கிறான்.தனக்குக் கற்பனை செய்யவோ,கண்டடையவோ அவற்றில் ஏதுமில்லை என்று எண்ணுகிறான்

-ஜெயமோகன்

#சங்கச்சித்திரங்கள்
-ஜெயமோகன்

உடன் பணியாற்றும் புத்தக ஆர்வர் நண்பர் அவ்வப்போது தான் படித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அன்று சங்கப்பாடல் ஒன்றினை சிலாகித்து கூறினார். அப்போது நான் சங்கச்சித்திரங்கள் பற்றிக்கூறி அதனை படிக்க கொடுத்து பின்பு அதுகுறித்து விவாதித்தது மகிழ்ச்சியளித்தது.

விகடனில் தொடராக வந்தபோது வாசித்தேன்.தற்போது ஒன்பது ஆண்டுக்கு பிறகு மறுவாசிப்பு செய்த போது அதே புத்துணர்வு அளித்தது.ஒன்றரை பக்கத்தில் சங்கப்பாடலுடன் ஒரு சிறு சம்பவத்தை கூறி நம்முடன் உரையாடுவது போல் இருக்கும். நான் இக்கதைகளில் ஒரு சிலவற்றை நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துள்ளேன்..

*வலியின் கொடுமை உணர்த்தும் சிறைபனி உடைந்த சேயரி..பாடலின் பொருளாய் "மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில் ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடிதாங்காது தொழுவத்து எருமை தலை குலுக்கும்போது எழும் கழுத்து மணியோசை எனைப்போல தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்? என துயருற்றவனின் இரவு கண் முன் விரிகிறது.

*ஒரு ரயில் பயணத்தில் ஒருவர் செம்புலப் பெயனீர் போல எனும் புகழ் பெற்ற கவிதைக்கு ஒருவர் விளக்கம் சொல்ல பிறிதொருவர் சற்றுநேரம் கழித்தால் செம்மண்ணும் நீரும் பிரிந்துவிடுமே என எண்ணியிருக்கலாம் என்றார்.அதற்கு இன்னொரு விளக்கத்தை ஜெமோ அனந்தராம அய்யர் எழுதியதாக சொல்கிறார்.
செம்புலம் என்றால் பாலைநிலம். பாலை நிலத்தில் பெய்த மழை எனக்கூறுவது பொருத்தம் என்றார்.
புதுமழைக்கு மண் புத்துயிர் பெறும் எனச் சொல்லி உரையாடல் நீளும்.

*புறநானூற்றில் கலஞ்செய் கோவே பாடலில்..கணவன் இழந்த அப்பாவி பெண் வருகிறார்.உலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.இதற்கு உதாரணமாய் இப்பாடலின் கருத்தை சொல்கிறார்.."ஐந்து நிலங்களின் உருண்டு வரும் சக்கரம் அதில் ஒட்டியிருக்கும் பல்லிக்கு அந்த நிலங்களின் வெம்மையும் குளுமையும் எல்லாம் தெரியும். ஆனால் வழிநடையின் களைப்பை அது அறியாது.அதுபோல உலகம் தெரியாத மனைவியாய் சிலர் இருப்பதாக கூறுவார்.
நெகிழ்ச்சியாய இருக்கும்.இக்கதையை பலரிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.இது ஒரு படிமம்.காலம் காலாய் இருப்பார்கள் ஆனால் ஒன்றை கற்றிருக்க மாட்டார்கள். பிறரே செய்வார்கள்.. நமக்கென்ன.. என இருப்பது.

*பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு பாடலில்.."யானையை பார்ப்பது எப்போதும் கண்கள் நிறையும் அனுபவம்தான்.விடியாது பெருகிச் செல்லும் இரவு போல.அது சென்ற பிறகு ஒரு அசிங்கமான வெளிச்சம் இருப்பதாகவும் அதை நிரப்ப எவ்வளவு சொற்களும் கற்பனையும் தேவை என்பதை வாழ்வியல் அனுபவத்தை பொருத்திக் கூறுவது இலக்கிய இன்பம்தான்.

*அந்தக்காலத்தில் அண்டை வீடுகளில் கணவன் விட்டுச்சென்ற வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.அதுகுறித்து சொல்லியிருக்கிறார் இதில்." பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதமாய் இருக்கிறது.பெண்ணின் சக்தியை உறிஞ்சி அதற்கு அஞ்சி அஞ்சி மேலும் பலவீனம் கொள்கிறாள்.தன் மனைவியின் மனத்தில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தான் அது என சங்ககாலத்திலேயே சில ஆண்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ரசித்தது

*கண்மூடிப் படுத்துவிட்டால் காடு வந்து உடம்பை மூடிவிடும்.

*ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று அவரது இழப்பின் மூலம் நாம் அறியலாம்.வெற்றிடத்தின் வலிமை அதன்மீது மோதும் சூழலின் அழுத்தமே. மெள்ள அந்த வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது, கருந்துளையாகிறது.

*துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி அவர்கள் மனம்தான். அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப்போல அனைத்தையும் உண்டு வளர்ந்தபடியே இருக்கிறது அது.ஒரு கணம் செயலற்றுப் படுத்தால் கூட ஆயிரமாயிரம் கறையான் கொடுக்குகள் கால் நுனியை வந்து பற்றிவிடும்.

*பிரியத்தை அறிவதற்கு ஒரு திரை எப்போதுமே தேவைப்படுகிறதா?

#கற்றதும் பெற்றதும்

இது போன்ற 40 பாடல்களை எளிமைப்படுத்தி அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்தி சொல்லியிருப்பார்.நான் இதை படித்தவுடன் விவரிக்கவோ இன்பத்தை பகிரவோ இதுபோல் ஒத்த அலைவரிசையுடைவர்கள் யாரும் இல்லை.படிப்பதை பகிர ஆள் இல்லாத சோகம் புத்திர சோகம் போன்றது.

இதுவரை இப்புத்தகத்தை எந்த எழுத்தாளரும் சொல்லததும் பரிந்துரைக்காததும் வியப்பாய் உள்ளது.ரஷ்ய,பிரெஞ்சு இலக்கியங்களை விட மேலானது தமிழ் இலக்கியம்.தாய்மொழி இலக்கியத்தை படிக்காமல் அயல் நாட்டு இலக்கியம் படிப்பது முரணாகும்.இப்புத்தகம் சங்க இலக்கியத்தை அறிவதற்கு ஒரு தொடக்கம்.

ஒரு வாசகனாக இன்னொரு வாசகனுக்கு சொல்வது இதை நம்பி வாசிக்கலாம். தமிழ் இலக்கியபாடல்கள் என்றாலே பாடலுக்கு பொழிப்புரை எழுதுவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால் இதில் வாழ்வியல் அனுபவத்தை தொடர்புபடுத்தியிருப்பார்.
(தமிழினி வெளியீடு)

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment