அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்த 5,000 ஆசிரியர்களுக்கு அவர்களின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் பணியாற்றிவரும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்கள் போன்றோர் உயர்கல்வி படிப்பது வழக்கம். அப்படி தமிழத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் துறையிடம் முன் அனுமதி பெற்றுப் படிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால், தற்போது சுமார் 5,000 பேர் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றதாக அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனுமதியில்லாமல் உயர்கல்வி படித்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,`எந்த பள்ளிகளில் எந்த ஆசிரியர் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றுள்ளார், ஆசிரியர் கல்வி பயின்றதற்கான காரணம் மற்றும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதற்கு ஆசிரியர் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை முழுமையான அறிக்கையாகத் தயாரித்து வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்தான் இதுபோன்ற உத்தரவைப் பிறபித்துள்ளார். இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வி படிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு தரப்பிலிருந்து ஊக்கத்தொகை வழங்கப்படும் அதைத் தவிர்ப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பிலிருந்து குற்றம் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், “ பொதுவாக ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு உயர்கல்வி படிப்பவர்களில் பல வகைகள் உண்டு, சிலர் தன் விருப்பத்திற்காக முழுமையாக கரஸ்பாண்டன்ஸ் முறையில் படிப்பார்கள் இன்னும் சிலர் அடுத்த கட்டத்துக்குச் சென்றால் ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதற்காக உயர்கல்வி படிப்பர்.
முழுமையாக கரஸ்பாண்டன்ஸில் படித்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஊக்கத்தொகை பெறும் நோக்கில் படிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் தனி வகுப்பு நடத்தப்படும் அப்படியிருக்கையில் தாங்கள் படிக்கவிருப்பதைச் சொல்லி முன் அனுமதி பெற்றுப் படித்தால், அவர் எடுக்கும் ஒரு மாத விடுமுறையின்போது அந்த இடத்துக்கு வேறு ஆசிரியரை நியமிக்கலாம். மேலும், உயர்கல்வி படிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு, அரசு ஊக்கத்தொகை கொடுக்கிறது என்றால் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.
அனுமதி வாங்குவதும் மிக எளிமையானது. எனவே, அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்று அல்லது படித்த பிறகு பின் அனுமதி பெறுவது சிறந்தது. சில இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆசியரின் உயர் கல்விக்கு அனுமதி மறுத்தால் அதைப் புகாராகக் கொண்டு செல்லலாம். ஆனால், உயர்கல்வி படிக்கும்போது அனுமதி பெறுவது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment