இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 20, 2017

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள விரைவில் புதிய பாடத் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்


அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய பாடத்திட்டம் குறித்த 3 நாள் கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த பாடத்திட்டம் நிச்சயம் தரம் வாய்ந்ததாக இருக்கும். அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரு புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதையொட்டி 54,000 கேள்வி-பதில்கள், வரை படங்கள் அடங்கிய தொகுப்பு 15 நாள்களில் வெளியாகும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கணினி, வைஃபை வசதி ஆகியவற்றை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. பொதுத் தேர்வு நேரங்களில் சில ஊர்களில் மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து தேர்வெழுத வேண்டியுள்ளது என்ற கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நிகழ் கல்வியாண்டில் அருகில் உள்ள மையங்களில் தேர்வெழுத வசதியாக கூடுதலாக 200 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம்.

இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை: புதிதாக வடிவமைக்கப்படும் புத்தகங்களின் ஒவ்வொரு பக்கமும் மாணவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வித் தகுதியை மதிப்பிடும் தேர்வு முறையானது, அறிவியல் விளையாட்டு போன்ற எந்தக் குறிப்பிட்ட துறையில் அந்த மாணவன் சிறந்து விளங்குகிறான் என்பதையும் மதிப்பிடும் வகையில் மாற்றப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இடம் பெறாத தகவல்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ருஷிகேஷ் சேனாபதி: புதிய பாடத் திட்டத்தில் மனப்பாட முறையைக் காட்டிலும், மாணவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாதிரியான பாடங்கள், வடிவமைப்பை விரும்புகிறார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். புரிதலுக்கு முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்படுவதன் மூலம் தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் சாதிக்க முடியும்.

No comments:

Post a Comment