இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 20, 2017

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்


வரும் 2030-ஆம் ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார். சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:

தமிழகத்தில் 58,000 பள்ளிகளில் 5.7 லட்சம் ஆசிரியர்களும் 1.30 கோடி மாணவர்களும் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் வரும் 2030-இல் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்வார்கள். அந்த நேரத்தில் மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்தச் சவால்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் அமையும். இனி வரும் காலங்களில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். படங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஒவ்வொரு பாடமும் மாணவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கேற்ப ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுவது அவசியம்.

பாடப்புத்தகங்கள், நூல்நிலைய புத்தகங்களை மட்டும் படிக்காமல் இதர தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளையும் பயன்படுத்த மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அடுத்து வரப்போகும் தேர்வு முறை மாணவர்களை அச்சுறுத்துவதாக இல்லாமல், மகிழ்ச்சியுடன் எழுதும் வகையில் இருக்க வேண்டும். இந்தப் பாடத்திட்டம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்படவுள்ளது.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு: தற்போதுள்ள தலைமுறை இரண்டு விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஒன்று கவனச் சிதறல். மற்றொன்று எந்த விஷயமும் எளிதாகக் கிடைக்கப் பெறுதல். இதனால் மாணவர்களின் சிந்தனைத் திறனும், போராட்டக் குணமும் குறைந்து விடுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். மனப்பாடத்தை மாபெரும் அறிவு என நாம் கொண்டாடும் வரை கல்விக்கு உய்வு இல்லை. அவர்களை ஒரே முறையில் சிந்திக்க நாம் பழக்கி விட்டோம். இதுதான் இப்போது சிறந்த வளர்ப்பு முறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களைப் பல வகைகளில் சிந்திப்பதற்கான சாளத்தை கல்வி உருவாக்கிக் கொடுக்குமேயானால் அந்தக் குழந்தை தனது உண்மையான ஆற்றலை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் கல்வியை மாணவர்கள் நேசிக்கும்படி செய்து விட்டால் 50 சதவீதம் தானாக கல்வி நிறைவு பெறும்.

ஒவ்வொரு பாடத்தையும் வடிவமைக்கும்போது அதை வாழ்க்கையோடு எப்படி தொடர்புபடுத்தி அந்தக் குழந்தை புரிந்துகொள்கிறது என்பது முக்கியம். எந்த மாற்றத்தையும் எதிர்கொள்ளவும் நாம் மனரீதியாக தயாராக இருந்தால்தான் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கக்கூடிய பாடத்திட்டம் அமையும்பட்சத்தில் கல்வி கற்கண்டாக மாறும். கற்பது அனுபவமாக மாறும். இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கல்வியில் இடை நின்றவர் எனக் குறிப்பிட்டால் அவர் பி.ஹெச்டி முடிக்கவில்லை என்று அர்த்தம். அந்த அளவுக்கு அங்கு படித்தவர்கள் உள்ளனர். நமது கல்வி முறையில் மிகச் சரியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிவின் சிகரமாக தேசத்தை மாற்ற முடியும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன்: வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அனைத்து பாடப் புத்தகங்களும் இணையதளங்களில் கிடைக்கும். மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டால் அன்று நடத்தப்பட்ட பாடங்கள் பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் அனுப்பி வைக்கப்படும். புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். மாணவர்களின் தரம் உயரும்போது ஆசிரியர்களின் பெருமை மேலோங்கும்.

No comments:

Post a Comment