'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் பேசியது: நீட் தேர்வை மாநில உரிமைக்கான வேட்டு என்றுதான் கருதுகிறோம்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி மாதம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் இரு மசோதாக்களை அதிமுக அரசு கொண்டு வந்தபோது அதை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு 100 நாள்கள் கடந்து விட்டன. ஆனால் மத்திய அரசு அது பற்றிக் கவலைப்படாமல் உள்ளது. மாநில உரிமை தொடர்பான பிரச்னை: இதனால்தான் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இது மாநில உரிமை தொடர்பான பிரச்னை. நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது.
இது சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் 98 சதவீதம் பேர் மாநிலத் திட்டத்தின் கீழும் 2 சதவீதம் பேர் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழும் படிப்பவர்கள். இரண்டுமே வேறு வேறு பாடத் திட்டங்கள். 98 சதவீதம் பேரை மாறச் சொல்வது வன்முறை. தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும். 'நீட்' தேர்வை துரத்தும் வரை தமிழகத்தில் இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, நீட் தேர்விலிருந்து விலக்கக்கூடிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால் ஏழைக் குழந்தைகளும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு ஏற்படும். இல்லாவிட்டால் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில் மருத்துவக் கல்வியின் நிலை கேள்விக்குறியதாகி விடும் என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், நடிகை ரோகிணி, கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ந.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
No comments:
Post a Comment