கடந்த 10 ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காத நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 1500 பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 28 பாட வேளைகளுக்கு பதிலாக 14 பாட வேளைகளில் மட்டுமே பணிபுரியும் நிலை உள்ளது.
தமிழகத்தில் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு தொடக்கப் பள்ளி, 3 கி.மீட்டரில் ஒரு நடுநிலைப் பள்ளி, 5 கி.மீட்டரில் ஓர் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீட்டரில் ஒரு மேல்நிலைப் பள்ளி வீதம் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கையின் காரணமாக, சுற்றளவு விதிமுறைகளுக்கு மாற்றாக, குறுகிய இடைவெளியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாகிவிட்டன.
இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. தற்போது, தமிழகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 3,500-க்கும் கூடுதலாக உயர்ந்துவிட்டன. இதில், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் ஒன்றியத் தலைநகரங்களில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் (மேல்நிலை வகுப்புகளில்) பயிலும் நிலை உள்ளது. பிற பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே உள்ளது.
குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை சராசரியாக 50-க்கும் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வோர் ஒன்றியத்திலும் குறைந்தபட்சமாக 6, அதிகபட்சமாக 12 மேல்நிலைப் பள்ளிகள் வீதம் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆசிரியர்கள் வரை பணிபுரிகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாட வேளை இருக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், 90 சதவீத அரசு முதுநிலை ஆசிரியர்கள் வாரத்துக்கு 14 பாட வேளைகளில் மட்டுமே (50 சதவீதம்) பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பல பிரிவு மாணவர்களை ஒரே பாட வேளையில் வைத்து வகுப்பு நடத்தும் நிலையும் உள்ளது. ஆனால் பணி நேரத்தை அதிகரித்து காண்பிக்க, பாடவேளை அட்டவணையை தனித் தனியாக அமைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்புக்கு தகுதியான ஊதியம் கிடைக்காத நிலையில், அரசின் வழிகாட்டுதலில் (28 பாட வேளை) 50 சதவீத பணிகளை கூட நிறைவேற்றாத அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் ஊதியத்துக்கு பெரும்தொகை செலவிடப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை என்பது இன்றுவரை குற்றச்சாட்டாக உள்ளது. இதுபோன்ற சூழலில், தேர்வு மைய கண்காணிப்பு பணி, விடைத் தாள் திருத்தும் பணி ஒதுக்கீடு செய்வதிலும் ஒவ்வொரு முறையும் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்னை ஏற்படுகிறது. தாங்கள் சார்ந்த சங்கங்களின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து நினைத்ததை சாதித்துக் கொள்கின்றனர்.
தங்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்க ஒன்றிணையும் ஆசிரியர்கள், அதே ஒற்றுமையை கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் செயல்படுத்துவதில்லை. எதிர்கால தலைமுறையின் நலன் கருதியும், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை தவிர்க்கும் வகையிலும், ஆக்கப்பூர்வமான சீரமைப்பு நடவடிக்கைளை தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: முதுகலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 40 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது உண்மைதான். இந்த நிலை, கடந்த 10 ஆண்டுகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது. ஊராட்சி ஒன்றிய அளவில் குறைவான மாணவர்கள் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கலாம்.
இன்றைய சூழலில், ஒரு ஒன்றியத்தில் 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள் தரமானதாக இயங்கினால் போதுமானது. குறைவான மாணவர்கள் எண்ணிக்கையோடு பெயரளவுக்கு பள்ளிகள் நடத்துவதை விட, ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி சிறப்பாக நடத்த முடியும். ஒன்றியத்துக்குள் பள்ளிகளை இணைக்கும்போது, ஊதியமாக வழங்கப்படும் கணிசமான தொகை மிச்சமாகும். அதில் ஒரு சிறு பகுதியை செலவிட்டால், மாணவர்களை அழைத்து வர தனிபேருந்து வசதி கூட ஏற்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment