அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, 635 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு, தற்காலிக அங்கீகாரம் வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்தது.
விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக கல்வித் துறையில், அடுத்த கல்வியாண்டிலிருந்து, 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை; 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தனித்தனி நிறத்தில், மூன்று விதமாக பிரித்து சீருடை வழங்கப்படும். கடந்த ஒன்றரை மாதமாக, இரவு பகல் பாராமல் உழைத்து, தேர்வு முடிவுகளை திட்டமிட்ட தேதிகளில், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட நவீன முறைகளில் வெளியிடப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு தமிழகத்திற்கு சரியானதல்ல என, குரல் கொடுத்து வருகிறோம்.
இருப்பினும், மத்திய அரசு நடத்தும் எந்த போட்டி தேர்வையும், தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக, அவர்களை திறமையானவர்களாக உருவாக்கும் எண்ணம் உள்ளது. இதை நிறைவேற்ற, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 'அரியர்' முறையில், பிளஸ் 2 படித்துக் கொண்டே தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பின், அரசு பள்ளிகளில் சேர, போட்டி உருவாக்கும் நிலையை உருவாக்குவதே எங்களது இலட்சியம். தனியார் பள்ளிகளை பாதுகாப்போம்; ஏழை, எளிய மாணவர்களையும் தனியாருக்கு இணையாக உருவாக்குவோம். தமிழகத்தின், 32 மாவட்டங்களில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில், போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
வரும் கல்வியாண்டுகளில், பாடத்திட்டங்களை மாற்ற உள்ளோம். எந்த மாணவனும், எதிர் காலத்தில் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை, போட்டி போட்டு வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவோம். பிளஸ் 1 வகுப்பிலேயே, கம்ப்யூட்டர் வழங்குவதோடு, இணையதள, 'வை - பை' வசதி செய்து தரப்படும். ஆசிரியர் பற்றாக்குறை என்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.
புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத நிலையில், மீதமுள்ளவர்களை தென் மாவட்டங்களில் கூடுதலாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment