தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆட்டோக்களில் மைக்-செட் பொருத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும். இதற்காக ஒரு ஒன்றியத்துக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கி தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித்துறை நேற்று வெளியிட்ட உத்தரவு: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
* இலவச கல்வி குறித்து பொதுமக்கள் அறியும்படி பேனர்கள் வைக்க வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்ய வேண்டும்.
* ஒரு ஒன்றியத்துக்கு 2 ஆட்டோக்கள் வீதம், 3 நாட்களுக்கு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பிரசாரம் செய்ய வேண்டும். 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை இதை செய்து முடிக்க வேண்டும்.
* ஒரு ஒன்றியத்துக்கு 2 ஆட்டோ வீதம் 413 ஒன்றியங்களுக்கு 826 ஆட்டோக்களுக்கு ஆகும் செலவின விவரம்: ஆட்டோ வாடகை ரூ.1500, ஆட்டோ பின்னால் பேனர் வைக்க ரூ.500, ஒலிபெருக்கி, மைக் செட் வாடகை ரூ.1000, செலவிட வேண்டும்.
* டிவி, வாட்ஸ் ஆப், ரேடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை ஜூன் 6ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment