ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தமிழக மாணவர்கள் சிறப்பான பயிற்சி பெற அனைத்து மாவட்ட நூலகங்களிலும் வல்லுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மாணவர்களுக்கு பயிற்சிகள்: மாணவர்கள் கல்வியில் சிறந்த பயிற்சிகளைப் பெற வசதியாக பள்ளி வேலை நாள்களில் மாலை நேரங்களில் ஒரு மணிநேரம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் (பிளாக்) ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாள்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்படும். சனிக்கிழமைகளில் மூன்று மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள், கல்வித் துறையில் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்களை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளைப் பார்க்கும் போது மாணவர்களுக்குத் தயக்கம் ஏற்படுகிறது. இதைப் போக்கும் வகையில் பல்வேறு வழிகாட்டி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. செய்முறைக் கையேட்டை மாணவர்கள் தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையை மாற்றி அரசே செய்முறைக் கையேடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
வட மாவட்ட ஆசிரியர்கள்:
வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் காலம் வரை அவர்கள் தாற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவர். மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக மூன்று மாதங்களுக்கு தாற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும். தாற்காலிகப் பணியிடங்களுக்கான ஊதியம் எவ்வளவு என்பதை அரசு பரிசீலித்து விரைவில் அறிவிக்கும்.
வரைவுப் பாடம் தொடர்பாக அனைவரின் கருத்துகளும் கோரப்படும். யாருடைய கருத்துகளாக இருந்தாலும் அதில் நியாயம் இருந்தால் பரிசீலிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு: மத்திய அரசின் மாற்றங்களுக்கு ஏற்றாற்போன்று மாணவர்களை தமிழக அரசு தயார் செய்யும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளை மாணவர்கள் திறம்பட எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 32 மாவட்ட நூலகங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குரிய பாடங்களை கற்றுத் தர வல்லுநர்களை நியமிக்க உள்ளோம் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment