பேடிஎம் நிறுவனம் புதிதாக துவங்கவுள்ள வங்கி மூலம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4 சதவீத வட்டி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்ட பின்பு டிஜிட்டல் முறை பண பரிமாற்றத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இதனால் ஆன் - லைன் பண பரிமாற்ற நிறுவனமான பே டிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. தற்போது 2.2 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் தற்போது தங்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனம் கட்டண வங்கியை துவங்கி இருக்கிறது. பேடிஎம் வங்கி இந்த வங்கியை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்யவும் மாற்றவும் மட்டுமே முடியும் கடன் வாங்க முடியாது.
அந்த நிறுவனத்தில் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்ய முடியும். பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் 4 சதவீதம் வரை வட்டியும் வழங்க இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூ 25,000 பணத்திற்கும் ரூ 250 பணம் வழங்குகிறது(கேஷ் பேக்). மேலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு, செக் புக், மற்றும் டி.டி வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மற்றும் இந்த வங்கியில் துவங்கப்படும் கணக்கிற்கு மினிமம் பேலன்ஸ் எதுவும் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி வாடிக்கையாளர்கள் இலவச இணைய வழி பண பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த வங்கிக்காக நாடு முழுவதும் 31 கிளைகளையும், 3 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மையங்களையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தை அரசு பாண்ட்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தையே வட்டியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. எந்த அபாயகரமான முதலீடு செய்யவும் விரும்பவில்லை என அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment