இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, May 23, 2017

அடுத்த 3 கல்வியாண்டுகளில் 1 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு


அடுத்த கல்வியாண்டில் (2018-19) இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவு:

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம் என்று அண்மையில் நடைபெற்ற வல்லுநர் குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் அடிப்படையிலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்த கருத்துகளின்படியும், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டத்துக்கு (சி.பி.எஸ்.இ.) நிகராக தமிழகப் பாடத் திட்டத்தை உடனடியாக வடிவமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதன் அடிப்படையில் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

எந்தெந்த வகுப்புகள் எப்போது?

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டில் (2018-2019) மாற்றியமைக்கப்படும். இரண்டு, ஏழு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2019-2020-ஆம் கல்வியாண்டிலும், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் 2020-2021-ஆம் கல்வியாண்டிலும் மாற்றியமைக்கப்படும். புதிய பாடத்தில் ஐ.டி. கல்வி: ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பவியல் (ஐ.டி.) கல்வி கற்பிக்க ஏதுவாக பாடத் திட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வரப்படும்.

செய்முறைக் கையேடு-

இணைய வழிக் கற்றல்: புதிய பாடத் திட்டம் என்பதால் ஆசிரியர், மாணவர்களுக்கு உரிய கையேடுகள் வழங்கப்பட உள்ளன. புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர் கையேடுகளையும், மாணவருக்கான செய்முறைக் கையேடுகளையும் தயாரித்து வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இணைய வழிக் கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மைத் தளத்தை உருவாக்கவும், ஆசிரியர்களும், மாணவர்களும் எளிதில் பயன்படுத்தக் கூடிய செல்லிடப் பேசி செயலிகளை உருவாக்கிச் செயல்படுத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பாடத் திட்ட மாற்றத்துக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்குமாறும், பொதுக் கல்வி வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று பாடத் திட்ட மாற்றுப் பணியை ஆறு மாத காலங்களில் முடிக்குமாறும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டம்: கவனத்தில் கொள்ளத்தக்கவை கற்றலை மனப்பாடம் செய்யும் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைக்க வேண்டும். தோல்வி பயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி கற்றலின் இனிமையை உறுதி செய்யும் நேரமாய் அமைந்திட வேண்டும்.

தமிழர்தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுவதுடன், அவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு நவீன உலகில் வெற்றிநடை போடுவதை உறுதி செய்திட வேண்டும். அறிவுத் தேடலை வெறும் ஏட்டறிவாய்க் குறைத்து மதிப்பிடாமல் அறிவின் ஜன்னல்களாக புத்தகங்கள் விரிந்து பரவி வழிகாட்டும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் அமைந்திட வேண்டும் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment