மே 3 - உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
உலகத்தில் வாழும் அத்தனை பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் பொருட்டு மார்ச் 3ந் தேதி உலக பத்திரிக்கை சுதந்திர நாளாள அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்க்கோ பிரிவு.
இந்த நாளை தேர்வு செய்யக்காரணம், 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17ந் தேதி, கொலம்பியா அரச பயங்கரவாதிகளால் பிரபல பத்திரிக்கையாளரான எசுப்பட்டோ என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த கிலேர்மா கானாசாசா என்பவர் பொகட்டோவில் உள்ள அவரது அலுவலகத்தின் வெளியே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஐ.நாவுடன் தொடர்பில் இருந்தவர். இவர் இறப்புக்கு பின் பத்திரிக்கையாளர்களுக்கான பாதுகாப்புக்கான குரல் உலகம் முழுவதும் எழுந்தது. இதனால் 1993 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரம் தொடர்பாக ஐ.நா சபை சட்டம் கொண்டு வந்தது. அதன்வழியாக உலக பத்திரிக்கை சுதந்திர தினம் உருவானது.
அதோடு, 1997 முதல், பத்திரிக்கையாளர் கிலேர்மா கானாசாசா பெயரில் ஐ.நா சபை, அநீதிகளை எதிர்த்தும், அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, சாமானிய மக்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அந்த விருதை வழங்கி கவுரவிக்கிறது. இந்தியாவில் இருந்து இந்த விருதை இதுவரை யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதற்காக இந்தியாவில் யாரும் அதிகாரத்தை எதிர்த்து போராடவில்லை என்பதல்ல அர்த்தம். அதிகார வர்க்கத்தை நோக்கி தன் எழுத்து வழியாக அன்று முதல் இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கிறது இந்திய பத்திரிக்கையுலகம்.
1781ல் வங்காள் கெஜட் என்கிற பத்திரிக்கை அப்போது கவர்னராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ்க்கு எதிராக பல கட்டுரைகளை எழுதியது. அதில் கோபமான அவர் அந்த பத்திரிக்கை நிர்வாகத்துக்கு பல தொல்லைகளை அரசு இயந்திரம் வழங்கினார். அதுவே இந்தியாவில் முதன் முதலாக பத்திரிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கடந்த ஆண்டு ஐநாவின் யுனஸ்கோ அமைப்பு வெளியிட்ட கணிப்பின்படி, சிரியா, ஈரான், ஈராக், லிபியா போன்ற அரபு நாடுகளில் தான் அதிகளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது. 2015 மற்றும் 2016 ல் மட்டும் 194 ஆண் பத்திரிக்கையாளர்கள், 18 பெண் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 827 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றது. அதாவது 5 நாட்களுக்கு ஒரு பத்திரிக்கையாளர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். போர் நடைபெற்ற சிரியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் கொல்லப்படும் பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது. போர் நடைபெறும் பகுதிகள் மட்டும்மல்ல இந்தியா போன்ற போர் நடைபெறாத நாடுகளிலும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல், கொலை செய்தல் அதிகரித்தபடியே உள்ளன.
கடந்த 2016 மே மாதம் மாதம் பீகாரில் ராஜீவ்ரஞ்சன் என்கிற பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார், அதே மாதத்தில் ஜார்கண்ட்டில் 35 வயதான அகிலேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் சுட்டுக்கொல்லப்படவில்லை. இவர்கள் எழுதிய செய்திகளால் பாதிக்கப்பட்ட குழுவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் ஒரு பத்திரிக்கையாளர் உயிரோடு வைத்து எரிக்கப்பட்டார். இதனை செய்தவர்கள் அந்த மாநில காவல்துறையில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
அரசாங்கத்தையும், அரசாங்க ஆதரவு பெற்ற மாபியா கும்பல், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகரிளையும், கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து தான் நேர்மையான பத்திரிக்கையாளர்கள் எழுதுகிறார்கள். எழுதப்படும் செய்தியில் தவறு என்றால் அதை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள வழிகள் இருந்தும் மேற்கண்ட யாரும் அந்த வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை. சட்டத்துக்கு எதிரான வழிகளையே உலகம் முழுவதும் கையாள்கிறார்கள், இந்த நிலை அதிகரிக்கிறது, இதனால் பத்திரிக்கையாளர் சுதந்திரம் படிப்படியாக பறிக்கப்படுகிறது என்பதே உண்மை.
No comments:
Post a Comment