மேல்நிலை பொதுத் தேர்வில் எவ்வித கிரேடு முறையும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 2017ல் நடைபெற்ற மேல்நிலைத் தேர்வின் முடிவுகள் கடந்த 12ம்தேதி அன்று அரசு தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டது.
அன்றைய தினம் தேர்வு முடிவுகள் தொடர்பான பள்ளி விபரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. அதில், மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களை 9 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்ற மாணவர் மற்றும் மாணவியர் எண்ணிக்கை குறித்தான புள்ளி விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ முதல் ஐ வரை என குறிப்பிடப்பட்டுள்ள இப்புள்ளி விபரத்தை பல ஊடகங்கள் அரசு தேர்வுத் துறையால் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.
மாணவரின் மொத்த மதிப்பெண்களை புள்ளி விபர பகுப்பாய்விற்காக வகைப்படுத்தும் போது மதிப்பெண்களுக்கு அருகில் வரிசை எண்களை 1, 2, 3... எனக் குறிப்பிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என்ற காரணத்தால் ஆங்கில அகர வரிசையில் ஏ முதல் ஐ வரை என குறிப்பிட்டுள்ளதே தவிர இக்குறியீடுகள் கிரேடு முறையினை குறிப்பிடுபவை அல்ல.
மாணாக்கருக்கு வழங்கப்பட உள்ள மதிப்பெண் சான்றிதழ்களில், கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே பதிந்து வழங்கப்படும். எவ்வித கிரேடும் மதிப்பெண் சான்றிதழ்களில் இடம்பெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment