தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் கடந்த நவம்பரில் அமல்படுத்தப்பட்டது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பயனாளிகள் வகைப்படுத்த உள்ளனர்.
இவர்கள் முன்னுரிமை வீட்டுப்பட்டியல் எனவும் மற்ற குடும்ப அட்டைதாரர்கள் முன்னுரிமை அல்லாத வீட்டுப்பட்டியல் எனவும் குறிப்பிடப்படுவர்.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறும் முன்னுரிமை வீட்டுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் உண்மையான குடியிருப்பு விபரம் அறியவும், தகுதியான நபர்களை அடையாளம் கண்டு இப்பட்டியலில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி நாளைமறுநாள் (டிச. 12) துவங்குகிறது. 15 நாட்கள் இப்பணி நடைபெறும். இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள களஆய்வு பணியாளர்கள் வீடுவீடாக சென்று விசாரித்து பதிவுகள் மேற்கொள்ள உள்ளனர்.
ஆய்வில் இணைப்பு விபரம் மற்றும் இதர பொருளாதார நிலை சம்பந்தப்பட்ட விபரங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து சேகரிக்கப்பட உள்ளது. மேலும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் பதிவுகளும் செய்யப்பட உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு 2017ல் ஸ்மார்ட்கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஆதார் பதிவுகளும் அவசியம். எனவே களஆய்வுப்பணிக்கு அலுவலர்கள் வரும்போது ஆதார்கார்டை பதிவு செய்யாமல் இருந்தால் அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும். அவற்றை உடனடியாக பதிவு செய்து கொள்வதும் அவசியம். தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள் தொடர்பாக கள விசாரணையின் போது சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment