ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்:
1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
2. காஸ் சிலிண்டர் வாங்கலாம்.
3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம்.
4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
6. நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் தொடங்க ஏற்பாடு.
சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 24 வரை செல்லும் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மேலும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "அரசு பொது மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் ரூ.500, 1000 நோட்டுகள் இம்மாதம் 24 வரை செல்லும்" என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் தலைமையிலான கூட்டத்துக்குப் பின்னர் வங்கிகளில் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,000 மாற்றி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல ஏடிஎம் மையங்களில் தற்போது ரூ.2,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.
வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், பெருகும் மக்கள் அதிருப்தியால் சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவ. 24 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கி விடுமுறையால் பாதிப்பு:
குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் இன்று (திங்கள்கிழமை) இயங்கவில்லை. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பெருமளவில் குவிந்துள்ளனர். பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம் மையங்களில் விரைவாக பணம் காலியாகிவிடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இரண்டு நாட்களில் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள்:
இன்னும் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2000 நோட்டு வழங்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் பணத் தேவையை கருத்தில் கொண்டு 'மைக்ரோ ஏடிஎம்கள் தொடங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
அதேபோல் நாடு முழுவதும் உள்ள 1.3 லட்ச தபால் அலுவலகங்களுக்கான பணப் பட்டுவாடா விரைவில் மேம்படுத்தப்படும். பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் கிடைப்பதற்கான அமைப்புகள் அத்தனையும் தடையின்றி இயங்க வழிவகை செய்யப்படும் என்றார்.
வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்:
ரொக்கக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சக்திகாந்த தாஸ் நிலைமை வெகு விரைவில் சீராகும் என்றார்.
No comments:
Post a Comment