தமிழகத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான, சர் சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோரின் சொந்த கிராமங்களில், இலவச இணையதள வசதி பெற உதவும், 'வை - பை' இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
உலகெங்கும், 'வை - பை' வசதியை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களுக்கான தலைமை அமைப்பு, 'வயர்லெஸ் பிராட்பேண்ட் அலையன்ஸ்.' அது, தங்கள் உறுப்பினரான, சென்னையைச் சேர்ந்த, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைவர் கைலாசநாதனிடம், 'இந்த ஆண்டு முதல், ஜூன், 20ம் தேதியை உலக, 'வை - பை' தினமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதை நினைவூட்டும் வகையில் ஏதேனும் செய்யுங்கள்' என, கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் உதயமானது. இதுகுறித்து, 'மைக்ரோசென்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜித் சிங் கூறியதாவது: நோபல் பரிசு பெற்றதின் மூலம், சி.வி.ராமன் மற்றும் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் நாட்டுக்கு புகழ் சேர்த்து இருந்தாலும், அவர்கள் பிறந்த ஊர்களான, தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள மாங்குடி மற்றும் புரசக்குடி கிராமங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் உள்ளன.
அதனால், அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக, அந்த கிராமங்களில், இலவச, 'வை - பை' வசதி ஏற்படுத்தி உள்ளோம். அங்கு, அதற்கான அடிப்படை வசதி இல்லை. இருந்தாலும், யூ.பி.எஸ்., போன்றவற்றின் உதவியுடன் அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம மக்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்துள்ளனர். அதனால், 'வை - பை' வசதியை பயன்படுத்தி, இணைய வசதியை அவர்கள் பெறலாம். மாங்குடியில் உள்ள பள்ளிக்கு, கணினி தர உள்ளோம். இதனால், மாணவர்கள் பயன் அடைவர். இதன் மூலம், இந்த, இரு கிராமங்களுக்கும், காலாகாலத்திற்கு 'வை - பை' வசதி அளிப்பது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment