தமிழக அரசின், வருவாய், போக்குவரத்து, மின்சாரம், ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்ேவறு துறைகளின் கீழ் 10.63 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு அரசு செவிசாய்க்காத நிலையில், பிப்ரவரி மாதம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தினர். இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்தது. இதையடுத்து ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 19ம் தேதி சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கிய கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து மே 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு செயல்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடு முடிவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் குழு தலைமை பொறுப்பில் இருந்து சாந்தா ஷீலா நாயர் சமீபத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் தற்போது குழுவில் உறுப்பினர் செயலர் கிருஷ்ணன் மட்டுமே உள்ளார். இதனால் ஜூன் 30க்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியுமா?: இதுதொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் அதை முதன் முதலாக செயல்படுத்தியது தமிழக அரசு தான். அதன்படி 2003ம் ஆண்டே தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2004ல் தான் மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி பார்த்தால் இத்திட்டத்துக்கும் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனவே தமிழக அரசு நினைத்தால் தன்னிச்சையாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய முடியும்’’ என்றார்.
No comments:
Post a Comment