மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
7வது ஊதியக் குழு பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படுகிறது.
ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா தலைமையிலான செயலர் குழு இறுதி செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகம் அமைச்சரவைக் குறிப்பைத் தயார் செய்தது. இதையடுத்து, ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இன்று புது தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
7-ஆவது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் அடிப்படையில், அதன் பரிந்துரைகள் சென்ற ஜனவரி 1-ஆம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 58 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவர்.
7வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதலாக செலவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.7 சதவீதம்.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் சேரும் அறிமுக நிலை பணியாளருக்கான மாத ஊதியம் தற்போதைய ரூ.7,000-லிருந்து, ரூ.18,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவை செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் தற்போதைய ரூ.90,000-லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment