பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விரிவுரையாளர் பணிக்கு, 272 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு, செப்., 17ல் நடக்க உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தமிழக ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்ற, 272 விரிவுரையாளர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். மூத்த விரிவுரையாளர், 38; விரிவுரையாளர், 166; இளநிலை விரிவுரையாளர், 68 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள், ஜூலை, 15ம் தேதி முதல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும். ஜூலை, 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., அலுவலகங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.
நேரிலோ, தபாலிலோ டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக்கூடாது. விண்ணப்பங்களுக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தில் எந்த வகுப்பின ருக்கும் சலுகை இல்லை. ஜூலை, 31ம் தேதி, 57 வயதை தாண்டுவோர் விண்ணப்பிக்க முடியாது. அனைத்து வகுப்பினருக்குமான, 69 சதவீத இடஒதுக்கீடு, தமிழில் முதுகலையுடன் எம்.எட்., படித்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகை உண்டு. எழுத்துத்தேர்வில், மூன்று தாள்களில், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் இருக்கும்.
முக்கிய பாடம் மற்றும் ஆசிரியர் பயிற்று முறை பாடங்களுக்கு, தலா, 70 மதிப்பெண்; பொது அறிவுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வு தொடர்பான பாடத்திட்டம் மற்றும் விரிவான தகவல்களை, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment