தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பலன் வழங்கப்படவில்லை. இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு விண்ணப்பித்து பணப்பலன் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்தில் சில தகவல்களை பெற்றார். அதன்படி 2016 ஜூன் 22 வரை 1,433 பேர் பணப்பலன் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு மட்டுமே பணப்பலன் வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பித்தோரில் 25 சதவீதம் பேருக்கு கூட பணப்பலன் கொடுக்கவில்லை. பணப்பலன் பெற்றோரில் பெரும்பாலானோர் நீதிமன்றங்கள் மூலமே பெற்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் எழுத்துப்பிழை போன்ற சிறு காரணத்திற்கு கூட விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர். விதிமுறை இருந்தும் துறை வாரிய பணப்பலன் கேட்டு விண்ணப்பித்தோரின் விபரங்களை தர மறுத்துவிட்டனர், என்றார்.
Thursday, June 30, 2016
புதிய பென்ஷன் திட்ட பணப்பலனிற்காக 1188 பேர் தவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment