பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு செய்துக் கொடுக்க வேண்டும் என்றும் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயலர் வி.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளிக் கல்வி துறை இணை இயக்குநர் டி.ராஜேந்திரன் தலைமையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எஸ்.ஜெயசந்திரன், நவமணி ஆபிரகாம் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "டி.ராஜேந்திரன் ஓய்வுப் பெற்று விட்டார். அதனால் ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து, அனைத்து பள்ளிகளிலும் 2 மாதங்களுக்குள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டனர். இதையடுத்து, வழக்கை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment