இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 30, 2015

எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்


தமிழகத்தில் எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில் பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாணவர்களுக்கு கல்வியோடு சுகாதாரம், பாதுகாப்பு, முதலுதவி போன்றவற்றில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் உயிர் காப்பதற்கு முக்கியமான பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வும் மாணவர்களுக்குத் தேவை என்பதை உணர்ந்து 7,9,10 ஆகிய வகுப்புகளுக்கு சமூக அறிவியல் பாடங்களில் பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

2015-16-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்திலும் இது இணைக்கப்பட உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன கல்வியாளர்களுக்கும், அனைத்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும், தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான 2 நாள் பயிற்சியை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி சென்னையில் புதன்கிழமை தொடக்கிவைத்தார். அப்போது, பயிற்சிக் கையேட்டையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி செயலாளர் டி.சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாட்டுப் பாடநூல் - கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெட்' தேர்வு முடிவு வெளியீடு: டிசம்பர் மாத தேர்வு அறிவிப்பு; விண்ணப்பிக்க நவ.1 கடைசி


2015 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது. அத்துடன், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான அறிவிப்பையும் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வு (நெட்)- நடத்தப்படுகிறது.

ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் இந்தத் தகுதித் தேர்வுக்கான அறிவுப்பு முறையே, மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். மொத்தம் 84 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 89 பெரிய நகரங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும். தற்போது 2015 டிசம்பர் மாத தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. தேர்வானது டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க நவம்பர் 1 கடைசி தேதியாகும். கட்டணத்தைச் செலுத்தியதற்கான வங்கி செலுத்து சீட்டை ("சலான்') பதிவிறக்கம் செய்யவும், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்தவும் நவம்பர் 2 கடைசித் தேதியாகும். தேர்வு முடிவு: கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. இதனை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு 'ஆன் - லைன்' பதிவு கட்டாயம்


'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடத்துகிறது. புதிய நடைமுறைதேர்வு முறைகளில் உள்ள குறைகளை தீர்க்க, டி.என்.பி.எஸ்.சி.,யில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.அதன்படி, தேர்வுக் கட்டண சலுகை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வருக்கான தகவல்கள் அனுப்புதல் போன்ற வற்றை எளிமைப்படுத்த, சுயவிவர பதிவுக்கான, நிரந்தர, 'ஆன் - லைன்' பதிவு முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

டி.என்.பி.எஸ்.சி.,யின் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, 'ஆன் - லைனில்' நிரந்தரப்பதிவு முறை - ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் இதுவரை கட்டாயமில்லை. ஆனால், இன்று முதல் இந்தப் பதிவு கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதற்கான சுயவிவர பக்கம், 'ஆன் - லைனில்' வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர் எப்போது வேண்டுமானாலும், நிரந்தர பதிவில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தேர்வு அறிவிக்கப்படும்போது, சுயவிவர பக்கத்தில், தங்கள் சான்றிதழ் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.சுயவிவர பக்கத்தின் மூலம், இனி தேர்வர்களுக்கு, 'யூசர்' எனப்படும், பயன்படுத்துனர் ஐ.டி., வழங்கப்பட்டு, 'பாஸ்வேர்ட்' எனப்படும் ரகசிய திறப்பு எண்ணும் தரப்படும்.

சட்ட நடவடிக்கை தேர்வர் தங்களுடைய விவரங்களை இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின், அது டி.என்.பி.எஸ்.சி.,யிடம் சேர்ந்து விட்டதா, எத்தனை முறை கட்டண சலுகை பயன்படுத்தப்பட்டு உள்ளது, பதிவேற்றம் செய்து உள்ள சான்றிதழ்கள் எவை போன்ற விவரங்களை, தேர்வரும், டி.என்.பி.எஸ்.சி.,யும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வர்கள் தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விரைந்து வெளியிட...

நிரந்தரப் பதிவு செய்தாலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பத்தில் உள்ள தகவல்களே, தேர்வு பரிசீலனைக்கு எடுக்கப்படும். நிரந்தர பதிவிலுள்ள சான்றிதழ் மற்றும் விவரங்கள் மூலம், இரண்டும் சரிபார்க்கப்படும். இந்த திட்டத்தால், வருங்காலத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்களை நேரில் வரவழைக்க தேவையில்லை. தேர்வு முடிவையும் விரைந்து வெளியிட முடியும். தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை, 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.tnpscexams.net/ என்ற இணைய தள முகவரியிலும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசுப்பணிக்கு இனி நேர்முகத்தேர்வு இல்லை


மத்திய அரசு இளநிலைப் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரியவருகிறது. இதன்படி இனி திறனறிவு மற்றும் உடல் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. நேர்முகத்தேர்வில் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டில்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை நிகழ்த்திய மோடி, பணி நியமனங்கள் பரிந்துரைகளின் படி நடக்காது எனவும், இனி தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 29, 2015

விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், பல இடங்களில் தனியார் பள்ளிகள், சில நாட்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துவிட்டு, வகுப்புகளை துவங்கி விட்டன. இதனால், மாணவ, மாணவியர் குழப்பமடைந்து உள்ளனர். இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம், பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

'அரசு அறிவித்த அட்டவணைப்படி மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும். காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விதிமுறையை மீறி வகுப்பு நடத்தக் கூடாது. மீறும் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புவதுடன், அங்கீகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிறப்பு வகுப்புக்கு அனுமதி காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த, கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளை இந்த ஆண்டு நடத்துகின்றன.

Monday, September 28, 2015

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது


தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், லேடி வெலிங்டன் கல்லூரியில் பேசியதாவது:

பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு 18 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை வீதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்காக காரப்பாக்கத்தில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அரசு பிஎட் கல்லூரிகளில் தற்போது கல்வி கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமாகவும், சுயநிதி கல்லூரிகளில் 41 ஆயிரத்து 500கவும் உள்ளது.

2 ஆண்டுகளுக்கான கல்விகட்டணம் நிர்ணயம் செய்ய உயர்கல்வி கட்டண நிர்ணய குழுவான பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் புதிய கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

சொன்னது போல 'ஸ்டிரைக்' நடத்த ஆசியரியர்கள் முடிவு!


'தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் சேர்ந்து, 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்க அலுவலகத்தில், 'ஜாக்டோ' உயர்மட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. பின், 'ஜாக்டோ' ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: ஆசிரியர்களுக்கான, ஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது; இலவச திட்டங்களை மேற்கொள்ள தனி அதிகாரி நியமிப்பது;

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை.வரும், 8ம் தேதி, தமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள், வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த போராட்டம், திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராடினால் ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க, பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள், பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். வரும், 8ம் தேதி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. அதிகாரிகள், ஆளுங்கட்சி ஆதரவு சங்கங்களை அழைத்து, எதிர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர் என, பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன

வருவாய்த்துறையில் நேரடி நியமனம்

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர் (தாசில்தார்), கோட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய் உதவியா ளர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பயிற்சி முடித்த பின்னர் வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். வருவாய் ஆய்வாளர்கள், பதவி உயர்வுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பயிற்சியை முடிக்கும் பட்சத்தில் ஏறத்தாழ 5 ஆண்டுகளில் (மாவட்டத்துக்கு மாவட்டம் இது மாறுபடும்) துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெறலாம். துணை வட்டாட்சியர்களும் கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

வருவாய்த்துறையில் இதுவரை யில் துணை வட்டாட்சியர் பதவியானது பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், துணை வட்டாட்சியர் பதவிக்கு இணையான துணை வணிகவரி அதிகாரி (டிசிடிஓ) பதவியைப் போன்று துணை வட்டாட்சியர் பணியிடங்களையும் நேரடித்தேர்வு மூலம் நிரப்பலாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. துணை வட்டாட்சியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் எத்தனை சதவீதம் நிரப்பலாம்? நேரடியாக எத்தனை சதவீதம் நிரப்பலாம்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று வருவாய் நிர்வாக ஆணையரக வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, September 27, 2015

மதுரையில் 27.9.2015 அன்று நடந்த TNPTF மாநிலச் செயற்குழுதகவல் துளிகள்...

1).தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநடு வருகிற பிப்ரவரி 2016ல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்த மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

2).டிசம்பர் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்பொழுது கல்வியை பாதுகாக்ககோரி மாபெரும் பேரணி - இந்திய தலைநகரில் நடத்த முடிவு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க செயற்குழுவில் மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதல்.

3).நாளை (28.9.15) ஜேக்டோ உயர்மட்ட கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் செ.பாலச்சந்தர் பங்கேற்பு.

4).2016 இயக்க நாட்காட்டிக்கு துணைப்பொதுச் செயலாளர் தோழர் மயில் தலைமையில் குழு அமைப்பு. மாநிலப்பொறுப்பாளர்கள் முருகேசன்,ராஜா, ஜான் ஆகியோர் குழுவில் இடம்பெற மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

5).இயக்க இதழை மாத இதழாக மாற்ற முடிவு. ஆண்டுச்சந்தா ரூ120 ஆகவும்.
ஆயுள் சந்தா ரூ1200 ஆகவும் மாற்ற செயற்குழு முடிவு.

6). ஜனவரி 2016 முதல் புதிய பொழிவுடன் மாத இதழ் வெளியீடு.சந்தா மாற்றம் உடனடி அமுல். ஆண்டு சந்தாவிற்கு மட்டும் அக்டோபர் 31 வரை தவிர்ப்பு.

7).வருகிற அக்டோபர் 14 புது தில்லியில்அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கருத்தரங்கம். மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப்பொருளாளர் திரு.ஜீவானந்தம், துணைப்பொதுச் செயலாளர் திரு.மயில், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன் பங்கேற்பு.

8).வருகிற 22, 23 ஹைதராபாத்தில் பெண் ஆசிரியர் மாநாடு. மாவட்டத்திற்கு ஒரு பெண் ஆசிரியர் வீதம் நமது அமைப்பிலிருந்து30பேர் பங்கேற்பு. பங்கேற்பாளர் விவரத்தினை அக்டோபர்5க்குள் தோழர் மலர்விழியிடம் மாவட்டச்செயலாளர்கள் சமரப்பிக்க வேண்டும்.

9).நோபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்காக நமது இயக்கத்தின் சார்பாக ரூ50000 அளிக்க மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

10).செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தைவெற்றிகரமாக்கியஉறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்க மாவட்ட கிளைக்கு உத்தரவு.

11).ஜேக்டோ வேலை நிறுத்தத்தை முழு மூச்சுடன் பணியாற்றி வெறிறகரமாக்கிட வேண்டுகோள்.

12).நாளை(28.9.2015)
மாநிலப் பொறுப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தொடக்கக்கல்வி இயக்குனரை சந்திக்கின்றனர்.

13).திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் அநாகரிகமான செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மாவட்ட கிளை மாபெரும் போராட்டம் நடத்த மாநிலச் செயற்குழு வழிகாட்டல். மாநிலத் தலைவர் தோழர் மோசஸ் பங்கேற்பு. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கிருஷ்ணன் அழைப்பு. மாநிலச் செயற்குழு ஏற்பு.

அக்.15-இல் பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள்


குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் தேதி, பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரும், மாணாக்கர்களும் வாழ்வின் உன்னத நிலை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்.

எனவே, அவரது நினைவைப் போற்றும்விதமாக அப்துல் கலாம் பிறந்த தினமான அக். 15ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் வரும் அக். 15ஆம் தேதி கலாமின் சாதனைகள் குறித்து விளக்கவும், இந்தியாவின் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் ஆராய்ச்சிகள், அறிவியல் வளர்ச்சிகள் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தவும், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு குறித்து தெளிவுபடுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய ஓய்வு 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்


மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதிய கொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.

அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ஏற்கனவே உள்ள சட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 56(ஜெ), 56 (ஐ) ஆகிய விதியின் கீழ் 50 முதல் 55 வயதுடைய அல்லது 30 வருடம் சர்வீஸ் முடித்தவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்காக 2 பேர் கொண்ட ஆய்வு கமிட்டியை அமைத்து செயல்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை உடனே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு கடந்த 4–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர்.
இதனால் ‘ஏ’ முதல் டி பிரிவு வரை உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் பழி வாங்கப்படலாம் என்று கருதுகின்றனர்.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கவும் ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டத்தை தற்போது மத்திய அரசு அமல்படுத்துகிறது.

இதன் மூலம் ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுகுறித்து எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம் கூறியதாவது:–

இந்த புதிய சட்டத்தால் ரெயில்வே துறையில் உள்ள அனுபவமிக்க தொழிலாளர்கள், அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். சம்பள உயர்வு கட், பதவியிறக்கம் போன்று ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் நேர்மையற்ற திறமையற்றவர்களாக கருதி கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை வெளியேற்ற மோடி அரசு சதி செய்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி வகுக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நசுக்கத்தான் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனை உடனே வாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.