ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது அடிப்படை சம்பள கணக்கு விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கருவூலம்-கணக்குத் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஜூலை மாதத்துக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால் மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 7 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்களில், 80 சதவீதம் பேருக்கு (சுமார் 6.8 கோடி பேர்) ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.2 கோடி பேருக்கு வழங்கப்படவில்லை.
அவர்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இந்த நிலையில், ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலக உயரதிகாரிகள் அளித்த விளக்கம்: ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது. தலைமைச் செயலகத்திலுள்ள பல உயரதிகாரிகளுக்கே ஆதார் எண் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படுவதாக வெளியிடப்படும் அறிவிப்புகளைக் கண்டு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேசமயம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களிடம் இருந்து ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டுமென கருவூலம்-கணக்குத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களில் 55 சதவீதம் பேரிடம் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆதார் எண் கிடைக்கப்பெற்றவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக அவற்றை கருவூலத் துறைக்கு தெரிவிக்கலாம் என்று தலைமைச் செயலக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment